நாட்டில் ஏனைய தொழிலாளர்களுக்கு உள்ள தொழில் சட்ட உரிமைகள், தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்புடையதில்லையா? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சம்பள பிரச்சினை தொடர்ச்சியாக இழுபறி நிலையில் உள்ளது. சம்பள சபைகள் சட்டத்தின் படி நாளொன்றுக்கான கொடுப்பனவு ரூபா 1,000 வழங்கப்பட வேண்டும். அதற்கு எவ்வித வேலை நிபந்தனையும் குறிப்பிட முடியாது.
ஆனால் தொடர்ச்சியாக தோட்ட தொழிலாளர்களுக்கு அந்நிலமை புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறாயின் நாட்டின் ஏனைய தொழிலாளர்களுக்கு உள்ள தொழில் சட்ட உரிமைகள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்புடையதில்லையா?.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை முடிவுக்கு வருவதாக இல்லை. சம்பள சபைகள் கட்டளை சட்டத்தின் படி நாளொன்றுக்கான சம்பளம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி நாளொன்றுக்கு 8 மணித்தியாலம் வேலை செய்கின்ற போது, ரூபா 1,000 சம்பளமாக வழங்கப்பட வேண்டும்.
விடுமுறை நாட்களாயின் ரூபா 1,500 வழங்கப்பட வேண்டும். அதன் போது எடுக்கப்பட வேண்டிய கொழுந்தினது அளவு தொடர்பாக எவ்வித நிபந்தனையும் விதிக்க முடியாது. எனினும் அரச பெருந்தோட்டங்களில் கூட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இல்லை. வேலை செய்யும் நேரத்தை முழுமையாக புறக்கணித்துவிட்டு எடுக்கப்படும் கொழுந்தின் நிறைக்கேற்பவே சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தி, கண்காணித்து அதனை கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கமே அதனை புறக்கணித்து செயற்படுகின்றது. இங்கு ஏனைய தொழிலாளருக்கு ஒரு சட்டமாகவும் எமது தோட்ட தொழிலாளருக்கு இன்னொரு சட்டமாகவும் உள்ளது.
பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் சம்பள சபைகள் மூலமான வர்த்தமானியை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியது. அதற்க்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் அவ்வழக்கை நிராகரித்துவிட்டது.
தற்போது அரச வர்த்தமானியின் படி நாளொன்றுக்கான சம்பளம் ரூபா 1,000 வழங்கப்பட வேண்டும். ஆனால் கம்பனிகள் நீதிமன்றம் கூறிய பிறகும் இச்சட்டத்தை ஏற்பதாக இல்லை.
மாறாக நாளொன்றுக்கு 18 கிலோகிராம் கொழுந்து எடுக்கப்பட வேண்டும் என நிபந்தனை முன்வைக்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாத போது கிலோ கிராம் இற்கு 50 ரூபா என, எடுக்கப்பட்ட கொழுந்தின் அளவிற்கு ஏற்ப கூலி வழங்கப்படுகின்றது. இல்லையெனில் அரை நாள் சம்பளம் பதியப்படுகிறது.
இவை முற்றுமுழுதாக இலங்கையின் தொழிற்சட்டங்களை மீறும் செயற்பாடுகள் ஆகும். இது தொடர்பான தொழிலாளர்களின் எதிர்ப்புகள், முறைப்பாடுகள் நாளாந்தம் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. எனினும் தொழில் அமைச்சோ உரிய தொழில் அதிகாரிகளோ இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை.
இந்நிலைமை இந்நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இன வேற்றுமையில் இன்னுமொரு அடையாளமாகவே தெரிகின்றது. இந்நிலைமையில் இருந்து மீழ் எழுட்சி பெற மலையக சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும்எ என்றார்.