கனவுகளின் காதலன் கலாம் ஐயா! அவருக்கே என் முதல் சலாம் ஐயா!

215 0

அறிவியல் மேதை டாக்டர்.ஏ.பி.ஜே. அவர்களின் பிறந்த நாள் இன்று. சிறந்த ஆசானாய், கவரும் பேச்சாளராய், பாரத நாட்டின் தலைவனாய், ஏவுகணையின் தந்தையாய் அவர் தொட்டுப் பார்க்காத துறைகளும் இல்லை. எட்டாத உயரங்களும் இல்லை. ‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற அவர் கூறிய கூற்றிற்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர். இன்றைய தினத்தில் அந்த மாமேதையை நினைவுகூறுவதில் நான் பெறுமையடைகிறேன்.

1931 அக்டோபர் 15 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய ஊரான இராமேஸ்வரத்தில் வறுமையின் பிடியில் வாடிக்கொண்டிருந்த குடும்பத்தில் அரிய முத்தாய் அப்துல் கலாம் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் தன்னுடைய குடும்ப சுமையை குறைக்க படிக்கும் போதே அந்த சிறுவயதிலேயே கலாம் வேலைக்கு சென்றிருக்கிறார்.

அதிகாலையிலே எழுந்து படித்து பின் தொழுகைக்கு சென்று பின் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்கு ரயிலில் வரும் பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றை வீடு வீடாகச் சென்று விநியோகித்த பின்னரே பாடசாலைக்கு செல்வார்;.  இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் கலாம் தனது பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார். அவரின் பள்ளி நாட்களில் நடந்த அவரால் மறக்க முடியாத ஒரு சம்பவமொன்றை இந்த இடத்தில் நான் நினைவுகூர விரும்புகிறேன். அதை நான் கூறுவதை விட அவரே கூறுவது போல இருந்தால் எப்படியிருக்கும்? நினைத்துப் பாருங்கள். இதோ! கலாம் கூறுகிறார் கேளுங்கள்.

அப்துல் கலாம் என்ற வழிகாட்டி

என் ஆசிரியர் கற்ற பாடம்.

இராமேஸ்வரம். உலகப்புகழ் பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமம். அந்த ஊரில் உள்ள மசூதி தெருவில் வளர்ந்த நாட்கள் மிகவும் பசுமையானவை. தினமும் மசூதித் தொழுகை முடிந்ததும் அருகிலுள்ள சிவன் கோவிலின் வாசலில் சிறிது நேரம் நிற்பேன். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த முஸ்லீம் பையனுக்கு இங்கென்ன வேளை என்பது போல ஒரு பார்வை பார்ப்பார்கள். அந்தப் பார்வைகள் என்னை தனிமைப்படுத்தியதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். உண்மையில் நான் அங்கு நிற்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று கோவில் உள்ளிருந்து ஒலிக்கும் அந்த மந்திர ஒலி என் மனதை வருடி ஒரு இனம் புரியாத இதமளிக்கும்.

அடுத்து என் உயிர் தோழனான இராமானந்த சாஸ்திரி அந்த கோவிலின் தலைமை பூசாரியின் மகன். அவன் தன் தந்தையுடன் அமர்ந்து மந்திரம் சொல்லும் அழகும் இடை இடையே நாங்கள் பார்த்து பரிமாரிக்கொள்ளும் புன்னகையின் அர்த்தம் எங்களுக்கு மட்டுமே புரியும். உள்ளுர் பள்ளியில் நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்தோம். உயிருக்கு உயிரான நண்பர்களாக வளர்ந்தோம்.

ஒரே வரிசை, ஒரே இருக்கை என இணைபிரியாமல் இருந்தோம். ஒரே ஒரு வித்தியாசம். அவர்கள் வழக்கப்படி அவன் பூனூல் அணிந்திருப்பான். எங்கள் வழக்கப்படி நான் வெள்ளைக் குல்லா அணிவேன். நாங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு புதிய ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்தார். அவர் கையில் பிரம்பைத் தட்டிக்கொண்டு எங்கள் வகுப்பறையை சுற்றி வந்த விதம் அவர் ஒரு கண்டிப்பானவர் என்பதை உணர்த்தியது.

டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் - இனிது

திடீரென அவர் என்னை நோக்கி ‘ஏய்! வெள்ளை குல்லா அணிந்த சிறுவனே என்ன தைரியம் உனக்கு? இந்த ஊர் கோவில் தலைமைப் பூசாரியின் மகன் அருகில் அமர்ந்திருக்கிறாயே. போய் கடைசி வரிசையில் உட்கார்’ எனக் கட்டளையிட்டார். கூனிக் குறுகிப் போன நான் என் புத்தகங்களை எடுத்துக் கொண்டு கடைசி வரிசைக்குச் சென்றேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமாகப் பெருகியது. பள்ளி விட்டதும் நானும் ராமுவும் நீண்ட நேரம் அங்கே உட்கார்ந்து அழுதோம். இதற்கு மேல் நாங்கள் தோழர்களாக இருக்க இயலாது என்று பயந்தோம்.

வீடு திரும்பிய என்னைக் கண்ட என் தந்தை ‘ஏன் உன் கண்கள் சிவந்திருக்கின்றன?’ என்று கேட்டார். மனம் நொந்து நடந்த அனைத்தையும் என் தந்தையிடம் கூறினேன். ராமுவும் நடந்ததை அவன் தந்தையுடன் கூறியிருப்பான் போலும். மறுநாள் அதிகாலையில் ராமு என் வீட்டிற்கு ஓடி வந்தான். ‘அப்பா உன்னை உடனே அழைத்து வரச் சொன்னார்’ என்று கூறி என்னை அச்சத்தில் உறைய வைத்தான். மேலும் என்னென்ன காத்திருக்கிறது என்று பயந்து கொண்டே நான் ராமுவைப் பின் தொடர்ந்தேன்.

அங்கு ராமுவின் வீட்டில் எங்கள் ஆசிரியரைப் பார்த்ததும் என் மூச்சே நின்று விட்டது. என்ன ஆச்சரியம்! ‘நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நீங்கள் இப்பொழுது கலாமிடம் மன்னிப்பு கேளுங்கள்’ என்று ராமுவின் தந்தை மிகக் கடுமையாக ஆசிரியரிடம் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. என்னையே என்னால் நம்ப முடியவில்லை.

‘எந்த ஒரு குழந்தையும் மற்ற குழந்தையை விட உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை. கடவுள் முன் எல்லாக் குழந்தைகளும் குழந்தைகளே. ஒரு ஆசிரியராக இந்த ஒற்றுமை உணர்வை வளர்ப்பது தான் உமது பணி. அதைவிடுத்து நீர் குலம் கோத்திரம் பார்த்து வேற்றுமை பாராட்டுவது மிகவும் தவறு.

Dr. A.P.J. Abdul Kalam with school children, oil on canvas, 30 x 40 inches  | Hanuman pics, Oil painting portrait, Girly art

நீர் இனி இந்த ஊரில் பணிபுரியத் தேவையில்லை ‘ என்று கோபமாகப் பேசினார். தன் தவறை உணர்ந்த எங்கள் ஆசிரியர் என்னை அணைத்து ‘கலாம் என்னை மன்னித்துவிடு. இன்று நான் ஒரு புதிய பாடம் கற்றுக்கொண்டேன். அதுதான் மனிதநேயம்!’ எனக் கூறி கண் கலங்கினார். ஆசிரியர் தன் தவறை உணர்ந்ததால் சமாதானமடைந்த ராமுவின் தந்தை ஆசிரியரை மன்னித்து பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதியும் தந்தார். அன்று முதல் மீண்டும் ராமுவும், நானும் முன் வரிசையில் ஒரே இருக்கையில் அமர்ந்து இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெற்று உயிர்தோழர்களாக வாழ்ந்து வந்தோம்.

இதுதான் கலாம் அவர்கள் சொன்ன தன் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை. ‘அக்னி சிறகுகள்’ என்ற அவருடைய சுயசரிதைப் புத்தகத்தில் இதை அவர் எழுதியிருக்கிறார்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் கற்றார். தன்னுடைய வாழ்க்கையில் கஷ்டங்களும் கவலைகளும் சூழ்ந்தாலுமே கலாம் இரவு, பகல் பாராது கண்விழித்து படித்தார். எப்போதும் வகுப்பில் முதல் மாணவனாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்வார். இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றவுடன் கலாமிற்கு அதில் அவ்வளவாக ஈடுபாடில்லை. புத்தகத்தை படித்து புத்தியை வளர்த்துக்கொண்ட கலாம் அண்ணாந்து பார்த்து வானத்தை படிக்க ஆரம்பித்தார். அவருக்கு அதில் தான் அலாதி விருப்பம்.

கனவுகளின் நாயகனல்லவா? அதுதான் அவரின் கனவுகள் வானைப் போல எட்டாத உயரத்தில் இருந்தது. இருந்தாலும் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ளாது விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் கற்கையை பயில ஆரம்பித்தார். அதிலேயே முதுகலைப் பட்டமும் பெற்றார்.

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ.! -  Cinemapettai

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய அறிவியல் பாதையில் அடியெடுத்து வைத்தார். அறிவாற்றலாலும் முழுமையான ஈடுபாட்டினாலும் இந்திய இராணுவத்திற்காக ஒரு சிறிய ஹெலிகொப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர ஆரம்பித்தார். SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி -I  என்ற துணைக்கோளை 1980 ஆம் ஆண்டு வெற்றி கரமாக விண்ணில் ஏவச்செய்தார்.

அவரின் இந்த ஒரு சாதனை தான் ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அறிவியல் துறையில் பாரத நாட்டின் பெயருக்கு பெருமை தேடி தந்த கலாமிற்கு மத்திய அரசு ‘பத்ம பூஷன்’ எனும் இந்தியாவின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தது. இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏவுகணையின் தந்தையாகவும் , இந்திய இராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாகவும் கலாம் இன்று வரை போற்றப்படுகிறார்.

ஒரு முன்னோடியாக, ஒரு பேராசாரியராக, ஒரு அறிவியல் மேதையாக திகழ்ந்த கலாம் இந்தியாவின் தலைவனாகவும் தான் யாரென்று வாழ்ந்து காட்டியுள்ளார். 2002 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டுவரை கிட்டதட்ட 5 வருடங்கள் சுதந்திர இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவியேற்றிருக்கிறார் கலாம். விண்ணில் பல சாதனை படைத்திருந்தாலும் மக்களின் சேவகனாகவும்,மாணவர்களுக்கு காவலனாகவும், தேசத்தின் உன்னத தலைவனாகவும் தன் பெயரை மண்ணிலும் பதிவு செய்த பெருமை கலாமிற்கு இருக்கிறது.

‘பத்ம பூஷன்’ விருது, ‘பாரதரத்னா’ விருது, ‘இந்திரா காந்தி விருது’,  ‘வீர்சவர்கார் விருது, ‘ராமானுஜன் விருது’, ‘அறிவியல் கௌரவ டாக்டர் பட்டம்’, ‘கிங்சார்லஸ் ii பட்டம்’, ‘பொறியியல் டாக்டர் பட்டம்’ , ‘சர்வதேச வோன்கார்மான்விங்ஸ் விருது’ மற்றும் ‘ஹூவர் சட்டங்களின் டாக்டர்’ மற்றும் ‘சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது’ போன்ற பல விருதுகளுக்கும், கௌரவங்களுக்கும் சொந்தக்காரரானார்.

‘இளைஞர்களே இந்திய தேசதம்.மாணவர்களே மாபெரும் சக்தி’ என்பது கலாமின் திடமான நம்பிக்கை. அவருக்கு மாணவர்களுடன் உரையாடுவதே மிகவும் பிடிக்கும். ஒரு விழாவிற்கு இளைஞர் கூட்டத்தை அழைக்க கூடாது எனும் அரச கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து அதற்காக தன்னுடைய பதவியையே ராஜனமா செய்து கொள்ளத் துணிந்தார் கலாம் என்றார் அவருக்கு இளைஞர்களின்  மேல் இருக்கும் அந்த அசைக்க முடியாத நம்பிக்கையை சற்று நினைத்து பாருங்கள். ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றுவது, இளைஞர்களை வழிநடத்துவது என வயது கடந்தாலும் கலாம் பல கோடி இளைஞருக்கு மத்தியில் ஒரு இளைஞராய் மிளிர்ந்தார்.

Tamil Nadu government to observe APJ Abdul Kalam's birthday as 'Youth  Renaissance Day'

அவருடைய விழாக்களில் யார் இருக்கிறார்களோ, இல்லையோ அங்கே மாணவர்கள் இருப்பார்கள்.  அந்த அளவிற்கு இளைஞர் மனதிலும், மாணவர் மனதிலும் கலாம் நீங்கா இடம் பிடித்த மாமேதை ஆனார்.’இளைஞர்களே கனவு காணுங்கள்’ என்ற அந்த ஒரு வார்த்தை தான் இன்று வரை அனைத்து இளைஞர்களும் இலட்சியத்தை அடைய வழியமைக்கிறது. அவரின் பொன்மொழிகள் ஒவ்வொன்றும் நம் அறிவுக்கண்ணை திறக்கிறது.

கலாம் இயற்கை நேசிப்பவராகவும் தன்னுடைய பணியை ஆற்றியுள்ளார். ஒவ்வொரு மனிதனும் மானுடனாகவேண்டுமானால், வாழ்நாளில் 10 மரங்களையாவது வளர்க்கவேண்டும் என்பதே கலாமின் கூற்று. அறிவுரை கூறினார். அந்த கோட்பாடு தான் ஆயிரம் மரங்கள் நட காரணமாகியது. உண்மையில் கலாம் கனவுலகளிற்கு மட்டுமல்ல பசுமைக்கும் காதலன் தான்.

2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஷில்லாங் நகரில் உள்ள ஒருகல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற கலாம். அந்த கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் உரையாடிக்கொண்டிருக்கும் போதே தன் இன்னுயிர் நீத்தார். அவருடைய பிரிவால் ஒட்டுமொத்த இந்தியாவுமே இருளில் சூழ்ந்தது.

‘நான் இறந்தால் அந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்காதீர்கள். உண்மையிலேயே நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்றால் அந்த நாள் மேலதிக வேலை நாளாக்குங்கள்.’ என்று அறிவியல் மேதை அப்துல் கலாம் கூறியது இன்று வரை கேட்கையில் உறைய வைக்கிறது. இளைஞர்களுக்கு மாபெரும் சக்தியாய், பாதை காட்டி நடந்த அவரின் வாழ்நாட்களும், பொன்மொழிகளும் வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் செதுக்கப்பட்டுள்ளன.

அறிவியல் மேதை அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை இந்த கட்டுரைக்குள் அடக்கி விட முடியாது. அவரின் வாழ்க்கைப் பாடத்தை படிக்க படிக்க வியந்து போகிறோம். இப்படி ஒரு மாமேதை இப்போது இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

மக்கள் குடியரசுத் தலைவர் கலாம்- Dinamani

இளைஞர்கள் இருக்கும் வரை இவர் வரலாறு பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். மறைந்தாலும் பலகோடி மக்களின் மனங்களில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமேதை அப்துல் கலாம் ஐயாவிற்கு செல்யூட்!

சுவஸ்திகா ராஜ்பிரகாஷ்