திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கி அபிவிருத்திகளை இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும்

122 0

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி அபிவிருத்தி ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியத்துவமுடையதாகும். 2003 இல் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. எனவே இனியொரு போதும் இத்திட்டம் குறித்த எதிர்ப்புக்களுக்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல. இது எதிர்கால சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் பிரகாரம் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி வளாகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்கும் போது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புக்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எண்ணெய் தாங்கிகளை வழங்கும் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால் நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டம் அடுத்த தேர்தலுக்கானதல்ல.  அடுத்த தலைமுறைக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். 2023 இல் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் 25 ஆண்டுகள் உள்ளன. அதற்கு முன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.

எனவே 2018-2050 திட்டங்களை 2020-2048 என்று குறைப்போம். இந்தக் குறிப்பிட்ட  காலப் பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். அடுத்த 5 வருடங்களில் இதனை செய்ய முடியும் என்று நான் கூறவில்லை, மாறாக அதனை ஆரம்பிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றேன். இந்த இடத்திலிருந்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

பொலன்னறுவை தலைநகராக இருந்த போது திருகோணமலை துறைமுகம் பெரிய துறைமுகமாக இருந்தது. அன்று திருகோணமலையைச் சுற்றி வங்காள விரிகுடா வரைபடம் காட்டப்பட்டது. வங்காள விரிகுடா பிராந்தியம் இன்னும் வளர்ச்சியடையாமல் உள்ளது. அந்த வளர்ச்சியை அடைய இன்னும் 10-15 ஆண்டுகள் ஆகும். அடுத்த 10-15 ஆண்டுகளில் இது முக்கிய துறைமுகமாக மாறும். அதற்கமைய இலங்கையை துறைமுக மையமாக மாற்றுவதே எமது முயற்சியாகும்.

திருகோணமலை துறைமுகத்தை ஆழமான துறைமுகமாக மாற்ற வேண்டும். கடற்படை விவகாரங்களில் கிழக்கு மாகாணம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் திருகோணமலை துறைமுகத்தை முன்னணி மூலோபாய துறைமுகமாக மாற்ற வேண்டும். அதாவது எமது கடற்படை நடவடிக்கைகளை நாமே மேற்கொள்ளும் வகையில் அதனை அபிவிருத்தி செய்வது இதன் நோக்கமாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது கடற்படைக்கு தற்போதுள்ளதை விட அதிக கப்பல்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா நமக்கு நெருக்கமாக இருப்பதால், அது மிகவும் முக்கியமானது.

தற்போது, இந்தியாவுடன் பல திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இந்த சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையத்தின் பணிகளை தொடர்வது எமது அடுத்த கட்ட நடவடிக்கையாகக் காணப்பட வேண்டும். இதற்கு தடை ஏற்பட்டால் அதனை நேரடியாக அரசின் கீழ் உள்ளடக்கி , அடுத்த கட்ட பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

2003ஆம் ஆண்டு திருகோணமலை துறைமுக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம். 2003 ஆம் ஆண்டு முதல், எண்ணெய் தாங்கிகளை வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களில் இருந்து பல எதிர்ப்புகள் எழுந்தன. அன்று எண்ணெய் தாங்கிகளை வழங்கியிருந்தால் , இன்று எரிபொருளும் இருந்திருக்கும். எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே பல பிரச்சினைகள் எழுந்தன.

எரிபொருளுக்கு ஏன் தட்டுப்பாடு ஏற்பட்டது? நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும் எண்ணெய் தாங்கிகளில் எரிபொருள் இருந்திருக்கும். ஆனால் இன்று எண்ணெய் தாங்கிகள் வெறுமையாக உள்ளன. இதை அன்று செய்திருந்தால் இன்று எமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

இதுபோன்ற தடைகளை மீண்டும் அனுமதிக்க முடியாது. அதை இப்பகுதி மக்களுக்காக செய்ய வேண்டும். இந்த திட்டத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன். பாராளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அது சட்டமாக்கப்படும். ஏனெனில் அரசாங்கங்கள் மாறலாம், பாராளுமன்றம் மாறலாம். ஆனால் கொள்கைகளை மாற்ற முடியாது. எனவே, தடையின்றி முன்னேற வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். திருகோணமலை மற்றும் இந்தியாவிற்கிடையிலான உறவினை அடிப்படையாகக் கொண்டு திருகோணமலையை வலுசக்தி கேந்திர மையமாக மாற்றியமைக்க வேண்டும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைக் கருத்தில் கொண்டு அதன் மத்திய துறைமுகம் திருகோணமலை துறைமுகமாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக இந்த துறைமுக நகரத்தை திருகோணமலை மாவட்டத்திற்கு மட்டுப்படுத்த முடியாது. இது அனுராதபுரம், வவுனியா, தம்புள்ளை நகரங்களுடன் இணைக்கப்பட வேண்டும். வன்னி, கிழக்கு மற்றும் வடமத்திய பிரதேசங்கள் நாட்டில் அதிகளவான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

இந்த மாகாணத்தில் தொழில்களை மேம்படுத்த இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தக வலயம் உருவாக்கப்பட வேண்டும். அந்த செயற்பாடுகளை இலங்கையும் இந்தியாவும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என நான் பரிந்துரைத்துள்ளேன். துறைமுகத்துக்கும் அதற்கும் தொடர்பு இருக்கிறது. அதற்கான கூட்டு குழுவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.