அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டி வந்தார்.
இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில் 5 பேர் பலியாகினர். ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வரும் இந்தக் குழு இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி டிரம்பிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி டிரம்புக்கு அந்த விசாரணை குழு சம்மன் அனுப்பியுள்ளது. இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வரும் டிரம்ப் இந்த விசாரணை முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.