அபிவிருத்தித் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை

122 0

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை என்றும், இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் சில அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதில் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி மேம்பாடு ஆகியவை உள்ளடங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பில் திருகோணமலை ஒர்ஸ் ஹில்லில்இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்க முற்பட்டபோது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அன்று எண்ணெய் தாங்கிகளை வழங்கியிருந்தால், இன்று நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பல இடங்களையும் ஜனாதிபதி ஒர்ஸ் ஹில்லில் இருந்தபடி அவதானித்துள்ளார்.திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், “திருகோணமலையில் விமான நிலையம் இருந்தாலும் அங்கே பெரிய விமானங்களை தரையிறக்க முடியாது.

எனவே, ஹிங்குரக்கொடை அல்லது வவுனியாவை சர்வதேச விமான நிலைய தலமாக உருவாக்குவதற்கான நிலைமை ஏற்படும்.திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாம் முழுமையான திட்டத்தை உருவாக்க வேண்டும். அதேபோன்று வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் உள்ளது.

வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் திருகோணமலை அமைந்துள்ளது. அதேபோன்று வடமத்திய மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அநுராதபுரம் மற்றும் பொலனறுவையின் பெரும் பகுதி இப்பிரதேசத்துக்கே சொந்தமாகின்றது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.