ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு குழுவின் அறிக்கைக்கு அமைய நாட்டில் 60 சதவீதமான மக்கள் தமது உணவில் 60 சதவீதத்தைக் குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கடந்த செப்டெம்பர் 13 ஆம் திகதி உணவு பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உணவு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கமைய இலங்கையில் 60 சதவீதமான மக்கள் 60 சதவீத உணவை குறைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு தட்டுப்பாடே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு தட்டுப்பாட்டுக்கான காரணம் பொருளாதாரக் குற்றங்களாகும். பொருளாதார குற்றங்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் உணவு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது சுகாதாரத்துறையும் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
இவ்வருடத்தில் இதுவரையிர் 59 000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் , நோயை இனங்காண்பதற்கான மற்றும் சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கு உரிய பணம் செலுத்தப்படாமையின் காரணமாக புதிதாக எவற்றையும் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது.
இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் குறைந்த விலைகளில் பெறப்படும் மருந்து பொருட்கள் , அதி கூடிய விலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறான மோசடிகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.