2023 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க உள்ளதாக ஜனாதிபதி திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் ரீதியான தீர்மானத்தை எதிர்வரும் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தற்காலிக அமைச்சரவையில் அமைச்சு பதவிகள் வழங்கப்படாமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அண்மையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்தில் ஒன்றிணைய இணக்கம் தெரிவித்துள்ளதால் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுக்களை வழங்கி நிலையான அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை ஜனாதிபதியிடமிருந்து சாதகமாகமான பதில் கிடைக்கப் பெறவில்லை.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பொதுஜன பெரமுனவினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை ஜனாதிபதி மறந்து விட கூடாது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைத்து அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை அடுத்த மாதம் அறிவிப்போம்.
பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் மாநாடுகள் நாடளாவிய ரீதியில் இனி இடம்பெறும்.கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பொதுஜன பெரமுனவை திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது. ஆகவே அரசியல் ரீதியான தீர்மானங்கள் விரைவாக எடுக்கப்படும் என்றார்.