ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தவறு என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
துரோகிகளும்,சந்தர்ப்பவாதிகளும் எம்மை விட்டுச் சென்றுள்ளார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையினால் நாடு பொருளாதார ரீதியிலும்,அரசியல் ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் போராட்டத்தினால் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் கலைக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச்சின்னத்தில் போட்டியிடாமல் சுதந்திர கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்தேன்.
ஆனால் பொதுஜன பெரமுனவின் எழுச்சிக்காக கட்சிக்குள் செயற்பட்ட ஒருசிலர் அதற்கு தடையை ஏற்படுத்தி இறுதியில் சுதந்திர கட்சியை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் நிலையை ஏற்பத்தினார்கள்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷவிற்கும்,2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆதரவு வழங்கியமை தவறான தீர்மானமாகும்.இந்த தவறை தற்போத திருத்திக் கொண்டுள்ளோம்.
துரோகிகள்,சந்தர்ப்பவாதிகள் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் ஒன்றிணைந்துள்ளார்கள். சுதந்திர கட்சி அரசியல் வரலாற்றில் பலமுறை வீழ்ச்சியடைந்திருந்தாலும் ஜனநாயகத்துக்கு முரணாக ஒருபோதும் செயற்படவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக ஜனநாயகத்துக்கு முரணாக செயற்படுகிறார். வெகுவிரைவில் அதற்கான பலனை பெற்றிக் கொள்வார் என்றார்.