அவுஸ்திரேலியாவை அச்சுறுத்தும் வெள்ளம் ; 3 மாநிலங்களை சேர்ந்த மக்களை வெளியேறுமாறு உத்தரவு

159 0

அவுஸ்திரேலியாவில் பெய்யும் கன மழையை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மூன்று  மாநிலங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விக்டோரியா, நியூசவுத் வேல்ஸ் மற்றும் தாஸ்மேனியா ஆகிய மாநிலங்களே இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் மழைவீழ்ச்சியில் 4 மடங்கு கடந்த 24  மணித்தியாலத்தில் அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பதிவாகியுள்ளது.

இதனால் குறைந்தது 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை  மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.

அவுஸ்திரேலியா முழுவதும்  லா நினோ தாக்கத்தால் ஏற்பட்ட   வெள்ளத்தால் இந்த ஆண்டு 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இரண்டாவது அதிக சனத்தொகை கொண்ட மாநிலமான விக்டோரியா மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.  அந்த மாநிலத் தலைநகர் மெல்போர்னில் உள்ள பலரை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளம் வீதிகளை சூழ்ந்தமையயால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு,  3,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகள் 24 மணித்தியாலத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மெல்போர்னின் வடகிழக்கில் உள்ள ஸ்ட்ராத்போகில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

24 மணித்தியாலத்தில் சில பகுதிகளில் 400 மில்லி மீற்றர் மழை பெய்ததை அடுத்து பல ஆறுகள் பெருக்கெடுத்ததால் தாஸ்மேனியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில், சுமார் 250 கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கும் என எதிர்பார்க்கப்பட்டதால்  ஃபோர்ப்ஸ் நகரத்திலிருந்து சுமார் 600 பேரை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.

அடுத்து வரும் வாரங்களில் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் லா நினோ வானிலையால் அவுஸ்திரேலியா வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.