டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தில் மோசடி இல்லை

122 0

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் 266 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ள ஆட்பதிவு திணைக்களம் , இந்த வேலைத்திட்டம் முழுமையாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் தலையீட்டுடன் , திறைசேரியிலிருந்தே நிதி பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் கடந்த 16 ஆண்டுகளாக தோல்வியடைந்துள்ள ஆட்பதிவு திணைக்களம் , இதற்காக 266 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக கண்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பில் விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதலே ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டிலுள்ள 15 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகள் தொடர்பான தரவுகளை சேகரித்து மீண்டும் அவற்றை பதிவு செய்வதன் மூலம் நபர்கள் தொடர்பான தேசிய பதிவு பட்டியலைத் தயாரித்தல் இதன் ஒரு முக்கிய நோக்கமாகும்.

அதே போன்று பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டையை வழங்குதல் , அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தல் மற்றும் தகவல் பரிமாற்ற பொறிமுறையை ஸ்தாபித்தல் என்பனவும் இதன் நோக்கமாகும்.

இந்த வேலைத்திட்டமானது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் முழுமையான தலையீட்டுடன் இடம்பெறுவதோடு , ஆட்பதிவு திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் நிதி வழங்கல் திறைசேரியினால் முன்னெடுக்கப்படுகிறது.

பொது மக்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 335 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் தேசிய பௌதீக மற்றும் மனித வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி மாகாண காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

45 ஆண்டுகளின் பின்னர் ஆட்பதிவு திணைக்களம் தொழிநுட்ப வசதிகளுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு பத்தரமுல்ல – சுஹூருபாயவிற்கு மாற்றப்பட்டது.

அது மாத்திரமின்றி பிரதேச அலுவலகங்களிலிருந்து தலைமை அலுவலகத்தை இலகுவாக தொடர்பு கொள்வதற்கான தொழிநுட்ப வசதிகள் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட அபிவிருத்தி அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கல் , உள்ளிட்ட பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச தரம் கொண்ட புகைப்படமெடுக்கும் நிலையங்களையும் , அதற்காக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளித்தல் என்பனவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்த வேலைத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட நிதி முறையாக முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் , இதில் எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.