77 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜெயலலிதா

411 0

201607171154298077_Jayalalithaa-letter-to-PM-take-action-to-77-fishermen_SECVPF  சிறீலங்கா    கடற்படை சிறைபிடித்த 77 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது குறித்து உங்கள் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வருகிறேன். கடந்த 15-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த 4 மீனவர்கள் எந்திர படகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் தற்போது தலைமன்னாரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

பாக்ஜல சந்தியில் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் இடத்தில் அவர்கள் மீன்பிடித்த போது விதிகளை மீறி இலங்கை கடற்படை கைது செய்து இருக்கிறது.  சிறீலங்கா     கடற்படையின் இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எங்கள் மீனவர்களை கடத்தி செல்வதுடன் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் பறித்து செல்கின்றனர்.

இலங்கை-இந்தியா இடையே சர்வதேச கடல் எல்லை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

சிறீலங்கா     கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களின் படகுகளை அவர்கள் விடுவிப்பதில்லை. இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் விரக்திக்குள்ளாகி இருக்கிறார்கள்.

எனவே, நீங்கள் உடனடியாக இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு நமது தூதரகம் மூலம் இலங்கை உயர்மட்டத்தில் பேசி அனைத்து படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த படகுகள் எல்லாம் தொடர்ந்து அங்கேயே நிறுத்தப்பட்டு இருப்பதால் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளன.

மேலும் நமது வெளி விவகார துறை மூலம் இலங்கையிடம் இந்த வி‌ஷயத்தை கொண்டு சென்று இப்போது சிறை பிடிக்கப்பட்டுள்ள 4 மீனவர்கள் உள்ளிட்ட அங்கு இருக்கும் 77 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 102 படகுகளையும் விடுவிக்க செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மத்திய வெளி விவகாரத்துறைக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.