தன்னை கடவுள் அவதாரம் என அறிவித்துக்கொண்டு, மக்களிடம் பல மில்லியன் டொலர்களை மோசடி செய்ததுடன் அவர்களை கொடூரமான வகையில் துன்புறுத்தியதாகவும் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணொருவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
வூ மே ஹோ எனும் 52 வயதான பெண், தன்னை இந்திய கடவுளொன்றின் அவதாரம் எனக் கூறிக்கொண்டராம்.
இதன் மூலம் தனது பக்தர்களிடம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனது பக்தர் ஒருவரிடம் 3.5 மில்லியன் டொலர்களை காணிக்கையாக வூ மே ஹோ பெற்றார் என சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனது பக்தர்களின் வருமான விபரங்களை தந்திரமாக வெளிப்படுத்தச் செய்து, சொத்துகளை வாங்குவதற்காக 5 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான பணத்தை திரட்டினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலத்தில் குறைந்தபட்சம் 14 பேரிடம் இவர் மோசடிகளைச் செய்துள்ளார் என நீதிமன்றத்pல் தெரிழவிக்கப்பட்டுள்ளது.
தனது பக்தர் ஒருவரை 2019, 2020 ஆம் ஆண்டுகளில் காயப்படுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 40 களிலுள்ள பெண் ஒருவரின் கையில், கத்தரிக்கோலினால் வூ மே ஹோ குத்தினார் எனவும், கட்டடமொன்றின் 2 ஆவது மாடியிலிருந்து குதிக்க நிர்ப்பந்தித்தார் என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
இவ்வாறு பாய்ந்ததால் மேற்படி பெண்ணின் கணுக்காலில் முறிவுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அப்பெண்ணின் கண்ணில் எண்ணெய் ஊற்றினார் எனவும், இரத்தம் வரும் வரை அப்பெண்ணின் காதை திருகினார்.
அப்பெண்ணை தாக்குவதற்கு ஏனையவர்களையும் தூண்டினார். அவர்களில் ஒருவர் அப்பெண்ணின் பல்லை பலவந்தமாக கழற்றினர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 4 பேரை மலம் உண்பதற்கும் அவர் நிர்ப்பந்தித்தார் எனவும், அவர்களுக்கான தண்டனையாக இவ்வாறு செய்தார் எனவும் வூ மே ஹோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வூ மே ஹோ ஆரம்பித்த பணிகளுக்காக அவரின் பக்தர்கள் நன்கொடைகளை வழங்கினர். அங்கு பாடசாலையொன்றை அவர் அபிவிருத்தி செய்வார் என நம்பிக்கையில் பக்தர் ஒருவர் 3.5 மில்லியன் டொலர்களை 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்ககப்பட்டுள்ளது.
மாடுகள் வாங்கவதற்காக பக்தர்கள் பலர் 8 லட்சம் டொலர்களுக்கு அதிகமான பணத்தை நன்கொடையாக வழங்குவதற்கும் அவர் ஊக்குவித்தார் என நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் எனவும், சிறந்த ஆரோக்கியத்துடன் திகழ முடியும் எனவும் தனது பக்கதர்கள் சிலரிடம் அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2015 முதல் 2020 ஆண்டு வரையான காலத்தில், தனக்கு சொத்துகளை வாங்குவதற்காக பக்தர்களிடம் வங்கிக் கடன்களை வாங்குமாறு கூறினார் எனவும், அக்கடன் தொகைகளின் தொகை185,000 முதல் 4.6 மில்லியன் டொலர் வரையானவை எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 பெப்ரவரியில், அனுமதிப்பத்திரம் இல்லாத ஒரு நபரிடம் தான் 5 லட்சம் டொலர்களை கடன் வாங்கியதாக அவர் கூறினார். பின்னர் அதற்கான வட்டியை செலுத்துவற்கு தனது பக்தர்களில் ஒருவரை ஊக்குவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் வூ மே ஹோ விளக்கமறியலில் உள்ளார். எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இவ்வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு 10 வருடங்கள் வரையான சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.