தேர்தல் முறைமையை திருத்தம் செய்தல் அல்லது வேறு வழிமுறைகளில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எடுக்கும் முயற்சியை தோற்கடிக்க 15 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.
தேர்தல் முறைமையை திருத்தம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் குறிப்பிட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் இரவு கொழும்பில் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, புதிய ஜனநாயக முன்னணி, 43ஆவது படையணி,தமிழ் தேசிய கூட்டமைப்பு,பிவிதுறு ஹெல உறுமய,ஸ்ரீ லங்கா மாஹஜன கட்சி,லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்யூனிச கட்சி,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், புதிய லங்கா சுதந்திர கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, விஜயதரணி தேசிய சபை,முன்னிலை சோசலிச கட்சி உள்ளிட் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தேர்தல் முறைமை திருத்தம் என குறிப்பிட்டுக்கொண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது.
நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் இதன்போது வலியுறுத்தினார்கள்.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் உள்ளூட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இவ்வாறான நிலையில் தேர்தல் பிற்போடப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.