சிறுவர்கள் குறித்து ஜனாதிபதி பொலிஸாருக்கு அதிரடி பணிப்புரை!

97 0

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

“குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உடல், உள ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், மத, சமூக ரீதியாகவும் முழுமையாக வளர்ச்சி காண்பதை உறுதி செய்வதற்கும், அவர்கள் சுயநல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கும், பாகுபாடு காட்டப்படுவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் ஏற்ற வகையில் அவர்களின் நலனை மேம்படுத்துவற்காக அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று அரசியலமைப்பின் 27 ஆம் சரத்தின் 13 ஆவது உப சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, குழந்தைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகளை, இலங்கை பொலிஸார் மற்றும் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கவும் இதன் போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  1. சிறுவர்களை பாலியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிராகவும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டமொன்றை அவசரமாக தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபருடன் ஆலோசனை நடத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குச் செல்லமுற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடையே இருக்கும் சிறுவர்கள், பெற்றோரிடமிந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமது கவனத்தை செலுத்திய ஜனாதிபதி, அவர்களை பெற்றோரிடம் தங்கவைக்க ஏற்பாடு செய்யுமாறும் அறிவித்துள்ளார்.

    சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் கல்வி மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, சிறுவர் இல்லங்களில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களை இனங்கண்டு , அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

    சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , இதன் மூலம் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

    பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கமற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்