தேர்தல் நடத்தக்கோரி வீதிக்கிறங்குவோரை மக்கள் நிராகரிக்க வேண்டும்

96 0

வீழ்ந்திருக்கும் நாட்டை எதிர்வரும் ஏப்ரல் ஆகும் போது ஜனாதிபதி நிச்சயமாக மீட்டெடுப்பார் என்ற நம்பிக்க எமக்கு இருக்கின்றது.

அதனால் தேர்தல் நடத்தக்கோரி வீதிக்கிறங்கி நாட்டை அதளபாதாலத்துக்கு தள்ளிவிட முயற்சிப்பவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு நாட்டை மீட்பார் என்ற அச்சத்திலேயே எதிர்க்கட்சி தேர்தலை நடத்தக்கோரி வலியுறுத்தி வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வங்குராேத்து அடைந்த நாட்டையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பெடுத்தார். தற்போது நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டு வருகின்றார்.

ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பெடுக்கும் போது இருந்த நிலை மற்றும் தற்போதுள்ள நிலைமையை பார்த்தால் மக்களுக்கு அந்த மாற்றத்தை உணர்ந்துகொள்ளலாம்.

அதனால் நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் இந்த பயணத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அப்போதுதான் எமக்கு நாட்டை பாதுகாத்துக்கொள்ள முடியுமாகின்றது.

அத்துடன் எதிர்க்கட்சியில் ஒருசிலர் தேர்தல் நடத்தவில்லை என்றால் வீதிக்க இறங்குவதாக தெரிவிக்கின்றனர். நாட்டின் தற்போதை நிலைமையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு முடியுமான சூழல் இருக்கின்றதா என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பொருளாதார நெருக்கடி நிலைமையில் தேர்தலை நடத்தினால் மேலும் நெருக்கடி நிலைமை அதிகரிக்கும். அதனால் மக்களே பாதிக்கப்படுவார்கள். அதனால் தேர்தல் ஒன்றை கோரி யாரும் வீதிக்கிறங்குவதாக தெரிவித்தால், அது நாட்டை அழித்துவிடுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியாகும். அவ்வாறானவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்.

மேலும் விருப்புவாக்கு முறை இல்லாதொழிக்கப்படவேண்டும். ஊழல்  மோசடிகளுக்கு இதுவே காரணம். அதேபோன்று தேர்தல் பிரசாரங்களுக்கு அதிகளவில் செலவு செய்யவேண்டி ஏற்படுவதும் இதனாலாகும்.

ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்த அரசியலமைப்பு திருத்தம் தேவையாகும். இவை அனைத்தும் மேற்கொள்வதற்கு நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலைக்கு வரவேண்டும்.

எதிர்வரும் ஏப்ரல் மாதமாகும்போது வீழ்ந்திருக்கும் இந்த நாட்டை ஜனாதிபதி கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதன் பின்னர் தொடர்ந்து தேர்தல்களை நடத்தலாம்.

அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருப்பதை தெரிந்துகொண்டே எதிர்க்கட்சியில் ஒருசிலர் தேர்தல் நடத்தாவிட்டால் போராடுவதாக தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டுவருவார் என்ற அச்சத்திலேயே இவர்கள் விரைவாக தேர்தலை நடத்துமாறு தெரிவித்து வருகின்றனர்.

நாட்டை அழித்துவிடவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் வலையில் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது. நாட்டை வீழ்ச்சியடையச்செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராகவே போராட்டம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.