பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொலை சதி விவகாரம் : 4 பேர் பிணையில் விடுவிப்பு

152 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டமிட்டம் தீட்டியமை, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்க முயற்சித்தமை தொடர்பி குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐவரில் நால்வரை  பிணையளித்து  கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இதற்கான உத்தரவை  புதன்கிழமை (12) பிறப்பித்தார்.

சோலை குமரன் அல்லது மாஸ்டர் எனப்படும்  காராலசிங்கம் குலேந்ரன்,  கடலன் அல்லது ஜனா எனப்படும்  லுவிஸ் மரியநாயகம் அஜந்தன், சேந்தன் எனப்படும் முருகையா தவசேந்திரன்,  வரதன் அல்லது மதன் எனப்படும்  ஞானசேகரலிங்கம் ராஸ்மதன் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் 5 ஆவது பிரதிவாதியாக  வெற்றி அல்லது கண்ணன் எனும்  மஹத்மாஜி அனோஜன் என்பவர் பெயரிடப்பட்டுள்ள போதும் அவர் மன்றை புறக்கணித்து வருகின்றார்.

கடந்த 2016 ஒக்டோபர் முதலாம் திகதிக்கும்  2017  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்  கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்,  ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டமை, தமிழீழ விடுதலை புலிகளை மீளுருவாக்க ஒத்துழைத்து முயற்சித்தமை  உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் எச்.சி. 242/2018 எனும் இலக்கத்தில்  கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்  இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள், முதலில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் கிளினொச்சி நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்ற போது, யாழ்  மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்து  அவர்கள் பிணை பெற்றிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே  கடந்த 2018 ஆம் ஆண்டு சட்ட மா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 5 பிரதிவாதிகளுக்கு எதிராக  குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தமையடுத்து, மன்றில் ஆஜரான  பிரதிவாதிகள் அது முதல் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே குறித்த வழக்கு நேற்று ( 12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது பிரதிவாதிகளுக்காக பிணை கோரி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

வழக்கு விசாரணைகளின் போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அசாத் நவாவி மன்றில் ஆஜரானார்.

முதல் பிரதிவாதி குலேந்திரனுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேலும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபும் ஆஜராகினர். 2 ஆம் பிரதிவாதிக்காக  சட்டத்தரணி ரனிதா மயூரனுடன் சட்டத்தரணி ரட்ணவேல் ஆஜரானார். 3,4 ஆம் பிரதிவாதிகலுக்காக சட்டத்தரணி  சுரங்க பண்டார ஆஜரானார்.

வழக்கின் பாதிக்கப்பட்ட தரப்பான ஜனாதிபதி சட்டத்தரணி  சுமந்திரனுக்காக சட்டத்தரணி  திவ்யா ஆஜரானார்.

இதன்போது, 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஊடாக திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய,  தமது சேவை பெறுநர்களை பிணையில் விடுவிக்குமாறு சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் கோரினர்.

சி.ஏ./பி.ஏ.எல்/20/2022 எனும் வழக்கில்  மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான நீல் இத்தவல மற்றும்  மேனகா விஜேசுந்தர ஆகியோர் கடந்த 5 ஆம் திகதி  வழங்கிய தீர்ப்பை மையப்படுத்தி அவர்கள் பிணை வழங்குமாறு வாதங்களை முன் வைத்தனர்.

எனினும் பிணை கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆட்சேபனம் வெளியிட்டார்.

எனினும் பாதிக்கப்பட்ட தரப்பான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்காக மன்றில் ஆஜராண சட்டத்தரணி  திவ்யா,  பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க தமக்கு எந்த ஆட்சேபனைகளும் இல்லை என மன்றில் பதிவு செய்தார்.

இந் நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன,  விளக்கமறியலில் இருந்து வந்த 4 பிரதிவாதிகளையும் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.