பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம் எலந்தூர் கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் உட்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்த காலத்தில், இந்த கொடுமை அரங்கேற்றப்பட்டிருப்பதை பார்க்கும் போது மனித குலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.
கேரளத்தை கடந்து நரபலி உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் தாத்தாவின் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக 6 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து நரபலி கொடுத்த கொடுமை நடந்தது. நரபலி மட்டுமே மூட நம்பிக்கை அல்ல. பில்லி சூனியம் வைத்தல், பேய் ஓட்டுதல் போன்ற செயல்களும் அந்த வகையை சேர்ந்தவை தான். அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான். மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான். சமூக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயனளிக்காத, பிற்போக்குத்தனத்தை திணிப்பதற்கு மட்டுமே பயன்படும் மூட நம்பிக்கை தமிழ்நாட்டில் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.
அதற்காக தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை வரும் 17-ந் தேதி தொடங்கவுள்ள சட்டப் பேரவை கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்; அதற்கு கால அவகாசம் இல்லை என்றால், கூட்டத்தொடருக்கு பிறகு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். மூட நம்பிக்கையை நாடு தழுவிய அளவிலும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் மத்திய அரசும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.