தென்அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணை வளம் மிக்கது. சர்வதேச அளவில் எண்ணை விலை சரிவு காரணமாகவும், அரசியல் குழப்பம் காரணமாகவும் அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
உணவு பொருள் பற்றாக்குறை, மின்சார தட்டுப்பாடு, அதனால் வேலையில்லா திண்டாட்டம் போன்றவை உருவாகியுள்ளன. இது வெனிசுலாவை ஆளும் நிகோலஸ் மதுரோவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின் முக்கிய நகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வர்த்தக வளாகங்களில் உணவு பொருட்கள் இல்லை. அனைத்தும் காலியாக உள்ளன. இதனால் உணவு பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதே நேரத்தில் அண்டை நாடான கொலம்பியாவில் உணவு பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. எனவே அங்கு சென்று பொருட்களை வாங்க மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.
எனவே, இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சமீபத்தில் எல்லைகள் திறக்கப்பட்டன. வெனிசுலாவில் தசிரா என்ற இடத்தில் இருந்து கொலம்பியா செல்லும் பாலம் திறக்கப்பட்டது.
அதேபோன்று கொலம்பியாவில் இருந்து வெனிசுலா வரும் குகுடா பகுதியும் திறக்கப்பட்டது. அதன் வழியாக கொலம்பியாவுக்கு படையெடுத்த வெனிசுலா மக்கள் உணவுப் பொருட்களை வாங்கி வந்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 35 ஆயிரம் பேர் எல்லை வழியாக கொலம்பியாவுக்கு கால்நடையாக நடந்தும், வாகனங்களிலும் சென்று வந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 2-வது தடவையாக எல்லை திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கொலம்பியாவின் எல்லை பாதுகாப்பு ராணுவம் வெனிசுலா ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். எனவே கொலம்பியா எல்லையை மூட அபர் நிக்கோலஸ் மதுரோ உத்தரவிட்டார். அதுவே உணவு பற்றாக் குறைக்கு காரணம் என வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.