வன்னியில் பின் தங்கிய கிராமம் ஒன்றில் நூலகம் ஒன்றை அமைப்பதற்கும், ஆயிரம் நூல்களைப் பெற்றுத் தரவும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவின் மக்கள் நீதிமைய மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதிமைய மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதருக்கும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்குமிடையில் கலந்துரையாடலொன்று வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை (09.10) இடம்பெற்றது.
இதன்போது, யுத்தத்திற்கு பின்னரான வன்னியின் தற்போதைய நிலமைகள் மற்றும் வன்னி மக்களின் பொருளாதார, வாழ்வாதார நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்த சட்டத்தரணி எம்.ஸ்ரீதர், வன்னி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் நூலகம் அமைப்பதற்கும், அவ் நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்குவதற்கும் பத்மஸ்ரீ கமலஹாசன் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக இதன்போது உறுதியளித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.
அத்துடன், சமகால அரசியல் நிலை மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், ஈழத்தமிழர் விடயம் தொடர்பில் இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பிலும் இதன்போது இருவரும் கலந்துரையாடியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.