உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கில் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்க செய்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு ( ரிட்) மீதான பரிசீலனை நாளை (11) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (10) இம்மனு ஆராயப்பட்ட போது, சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக கால அவகாசம் கோரப்பட்டமையை அடுத்து இவ்வாறு மனுவானது நாளை 11 ஆம் திகதி செவ்வாயன்று மனுவை பரிசீலனை செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான தம்மிக கனேபொல மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய குழு இதற்கான தீர்மானத்தை அறிவித்தது.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கின் சந்தேகநபராக தமது பெயரை குறிப்பிட்டு, எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்து, கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட நீதிவானின் கட்டளையை வலுவிழக்க செய்யுமாறே மைத்திரிபால சிறிசேன மனுவில்கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லாத நிலையில், அது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனு ஒன்றின் பிரதிவாதியாக தாம் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டமை நீதியான விடயம் அல்லவெனவும், இயற்கை நீதிக்கு புறம்பான செயல் எனவும் தெரிவித்து இந்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக கோட்டை நீதவானும் நீதிமன்ற பதிவாளரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் குறித்த ரிட் மனு ஆராயப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரனி உபுல் ஜயசூரிய சிரேஷ்ட சட்டத்தரனி ஜீவந்த ஜயதிலக, சட்டத்தரனிகளான ஹபீல் பாரிஸ், கீர்த்தி திலகரத்ன, அஷான் பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய ஆஜரானார். பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன பிரசன்னமானார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலத்த காயமடைந்து, கால் ஒன்றை இழந்த ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 298 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அவரது அலட்சியத்தால் குறித்த தாக்குதலில் மரணங்கள் சம்பவித்ததாக மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அம்மனு தொடர்பிலேயே கோட்டை நீதிவான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.