ஊழல் , மோசடிகள் அற்ற கொலைகளுடன் தொடபற்ற நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம்.
அதற்கு எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை. எமது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற திறமையுடைய பல இளைஞர்கள் போதுமானளவு காணப்படுகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 22 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு , நிட்டம்புவ – ரன்பொக்குனுகம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட மத வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இன்று தேவையானளவு திறமையுடைய இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஊக்கமளித்து மேம்படுத்த வேண்டும். மாறாக எனது குடும்பத்திலுள்ள எவரும் தேவையில்லை.
தற்போது பல குடும்பங்கள் அரசியலில் உள்ளன. எனவே நாம் இளம் தலைவர் ஒருவரை உருவாக்குவோம். ஊழல் , மோசடிகள் அற்ற , கொலை குற்றங்களுடன் தொடர்பற்ற நாட்டுக்காக அர்ப்பணிக்கக் கூடிய இளம் தலைமைத்துவத்தை நாம் கட்டியெழுப்புவோம் என்றார்.
இதன் போது , ‘உங்களைப் போன்ற ஒரு தலைமைத்துவம் மீண்டும் நாட்டுக்கு கிடைக்கப் பெற்றால் அது சிறப்பாக இருக்குமல்லவா?’ என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி , ‘நாம் தற்போது முதியவர்களாவிட்டோம்.’ என்று குறிப்பிட்டார்.