கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சம், ரூ.1000 ஓய்வூதியம்

408 0

201607171228247596_Jayalalithaa-give-aid-and-monthly-pension-for-whose-lost_SECVPFமேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சமும், ரூ.1000 ஓய்வூதியம் வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–தேசிய கண்ணொளி இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கண் புரையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கும் வகையில் கண்புரை அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சுமார் 5.5 லட்சம் நபர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. பார்வை இழப்பை, குறிப்பாக கண்புரையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பதில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது.இந்த ஆண்டு இதுவரை, 1.96 லட்சம் நபர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் பார்வையை முழுமையாக பெற்று நலமாக உள்ளனர்.

ஏழை எளியோருக்கு, எவ்வித கட்டணமுமின்றி, அரசு மருத்துவமனைகளில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சராசரியாக ஆண்டு தோறும் 928 பேர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 14.6.2016 முதல் 16.6.2016 வரை மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தவுடன், இந்த நாட்களில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 23 பேர் களுக்கும் சேலம் மற்றும் கோயம்புத்தூர் அரவிந்த் கண் மருத்துவமனை, சேலம் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தவுடன், முதல் – அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜய பாஸ்கர் ஆகியோரை சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், உயர் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கும்படி உத்தர விட்டார்.

மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 23 நோயாளிகளில், சிகிச்சைக்குப் பின் இரண்டு நபர்களுக்கு பார்வை திரும்ப கிடைத்துள்ளது.17 நோயாளிகளுக்கு தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கண் சிறப்பு மருத்துவர்களின் கருத்துப்படி, மூன்று மாதங்களுக்கு பிறகே பார்வை திரும்ப கிடைப்பது குறித்து தெரிய வரும். நான்கு நோயாளிகளுக்கு இன்னும் தொற்று முழுவதுமாக நீங்கவில்லை என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தொற்று பாதிப்பு ஏற்பட்ட 23 நபர்களுக்கும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். மேலும், பார்வை பாதிக்கப்பட்ட 21 பேர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கவும் முதல்/அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.