கனவரல்ல ஈ. ஜி.கே பெருந்தோட்ட பிரிவில் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் குடியிருப்புக்கு நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.
பின்னர் நீர்க்குழாய் திருத்தச் சென்ற நபர் மிக நீண்ட நேரமாகியும் வராததால் காவலாளி சென்று பார்த்த போது, குறித்த நபர் மின்சாரம் தாக்கி, கீழே கிடப்பதை அவதானித்துள்ளார்.
அதன்போது, கூக்குரிலிட்டு அயலவர்களை வரவழைத்ததன் பின்னர், உடன் நமுனுகுலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
கனவரல்லை பெருந்தோட்டம் தொழிற்சாலையில் பணிபுரிந்த தமிழரசன் கணேசமூர்த்தி என்ற 25 வயது நிரம்பிய இளைஞனே மின்சாரம் தாக்கி பலியானவராவார்.
இதன்போது பசறை அரச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த நபர் ஏற்கனவே இறந்துள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இம் மரணத்திற்கு நீதி கோரி கனவரல்லை பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 7 பிரிவிகளிலும் சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் 10-10-2022 இன்று முதல் தொடர்ச்சியாக பணிப் பகிஷகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பலியானவரரின் சடலம் பசறை அரச மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மஜிஸ்ரேட் விசாரணைகளை மேற்கொள்ள பதுளை வைத்தியசாலையில் பிரேத அறைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்மரணத்தை தொடர்ந்து கனவரல்லை பகுதியில் பெரும் பதட்டமும், அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.