திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக 2-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொதுச் செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைப் பொதுச் செயலராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டார்.
திமுகவின் 15-வது பொதுத் தேர்தலில் ஒன்றியம் முதல் மாவட்டச் செயலர்கள் வரையிலான நிர்வாகிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பொதுக்குழு கூடியதும், தலைவர், பொதுச் செயலர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலை அறிவித்த அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையராக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி செயல்படுவார் என்றார்.
இதையடுத்து, 2,068 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிவுடன், திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஆற்காடு வீராசாமி அறிவித்தார். தொடர்ந்து,பொதுச் செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு, தணிக்கைக் குழு உறுப்பினர்களாக முகமது சகி, கு.பிச்சாண்டி, வா.வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.