ஜெனீவா தீர்மானத்தையடுத்து அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து கையாளவேண்டிய பிரச்சினைகள்

130 0

காலத்தை கடத்துவதற்காக உண்மை நிலைவரங்களை நிராகரிப்பதை விடுத்து பாராளுமன்றமும் ஜனாதிபதியும் ஆட்சிகமறையில் அரசியல் ஞானத்தை வெளிப்படுத்தவேண்டியதே இன்று நாட்டுக்கு அவசியமாக தேவைப்படுகிறது என்று இலங்கை தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியிருக்கிறது.

கடந்த வாரம் ஜெனீவாவால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து கையாளவேண்டிய பிரச்சினைகளை பட்டியலிட்ட தேசிய சமாதானப் பேரவை ‘ காலத்தை கடத்த நிராகரிப்பு அல்ல ஆட்சிமுறையில் அரசியல் ஞானமே அவசியம்’ என்று தலைப்பில் ஞாயிறன்று அறிக்கையொன்னறை விடுத்திருக்கிறது.

அதன் விபரம் வருமாறு;

ஜெனீவாவில் கடந்தவாரம் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையி்ன்  கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்துக்கு எதிராக ‘ இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தில் ‘ என்ற தலைப்பின் கீழ் 51/1 இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.தீர்மானத்துக்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலமாக இலங்கை மீண்டும் ஒரு தடவை பாதகமான முறையில் சர்வதேசத்தின் கவனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்த தீர்மானத்தை முன்னெடுத்து ஆதரித்தவற்றில் பல நாடுகள் மீதே இன்று எமது நாடு எதிர்நோக்குகி்ன்ற நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியில் விடுபடுவதற்கு நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளும் இந்தியா,ஜப்பான் போன்று வாக்களிப்பில் பங்கேற்காத நாடுகளும் இலங்கையர்களின் நல்வாழ்வில் அக்கறைகொண்டவை என்பதுடன் நாடு மீண்டழ வேண்டும் என்பதில் ஆர்வமுடையவையுமாகும்.ஜெனீவாவில் அரசாங்கம் வெளிப்படுத்திய முரண்நிலையான நிலைப்பாடு அந்த நாடுகள் இலங்கைக்கு அளித்துவருகின்ற தொடர்ச்சியான ஆதரவைப் பாதிக்காது என்று நம்பலாம்.

இது தற்போதைய அரசாங்கம் உட்பட வெவ்வேறு அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 9 வது தீர்மானமாகும்.ஒவ்வொரு தீர்மானமும் புதிய நிபந்தனைகளை முன்வைத்தன. அவற்றில் உள்ள நிபந்தனைகளின் பட்டியல்கள் நீண்டுகொண்டு போனதுடன் தேசிய மட்டத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார ஊழலையும் உள்ளடக்கியிருக்கின்றன.பொருளாதார நெருக்கடியினால் பெரும் இடர்பாடுகளுக்கு உள்ளாகியிருக்கும் ப்பாவி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இலங்கை மீது தடைகளை விதிக்க சர்வதேச சமூகம் விரும்பாமல் இருக்கலாம்.

ஆனால், சர்வதேச சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்படும் தனிநபர்களுக்கு எதிராக சர்வதேச சட்டங்களும் தண்டனைக்குரிய தடைவிதிப்புக்களும் பயன்படுத்தப்படலாம்.பொருளாதார நெருக்கடியில் இருந்தும் சர்வதேச சட்டத்தின் நீளும்  கரங்களிடமிருந்தும் சகல குடிமக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.நாட்டின் மதிப்புக்கு ஏற்படக்கூடிய சேதத்தையும் நாட்டுக்கு வருகின்ற பொருளாதார உதவிகள் மீதான தாக்கத்தையும் பரிசீலனைக்கு எடுக்கவேண்டியது அவசியமாகும்.

பொதுமக்களின் கஷ்டங்களும் அவர்களின் நிறைவேற்றப்படாத தேவைகளும் அலட்சியம் செய்யப்படக்கூடாது என்பதே அறகலய மக்கள் கிளர்ச்சியின் மூலமான படிப்பனையாகும். அன்றாட நிகழ்வுகளும் மக்களினால் எதிர்நோக்கப்படுகின்ற இடர்பாடுகளும் மீண்டும் போராட்டத்தை மூளவைக்கக்கூடிய சாத்தியத்தைக் கொண்டுள்ளன.இன்றைய தருணத்தில் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியினாலும் ஆட்சிமுறையில் அரசியல் முதிர்ச்சியும் விவேகமும் உடைய தலைமைத்துவப் பண்பு வெளிப்படவேண்டும்.இதுவே இலங்கைக்கு இன்று தேவை, காலத்தை கடத்துவதற்காக உண்மைகளை நிராகரிக்கும் போக்கு அல்ல.

காணாமல் போனவர்களின் விவகாரம், உண்மை ஆணைக்குழு ஒன்றின் ஊடாக போரின்போது நடந்தவற்றை கண்டறிதல்,  பயங்கரவாத தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் மக்களின் மனித உரிமைகளை மீறக்கூடிய  சட்டங்களை இயற்றுவதையும் தவிர்த்தல், அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்துவைப்பதற்கான முயற்சிகள், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்துதல் மற்றும் பொதுமக்களின் பொருளாதார இடர்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகியவையே அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பிரச்சினைகளாகும் என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது.