அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை தற்போதைய நிலையில் இயற்றுவது பொருத்தமற்றதாகும். சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூல வரைபின் ஒருசில விடயங்களுக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே பாராளுமன்றத்தின் ஊடாக இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை மாறாக நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்படுகிறது.
22ஆவது திருத்தச்சட்டத்தை அமெரிக்காவில் இருந்துக் கொண்டு எவரும் தடுக்கவில்லை.தனிநபரை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யும் போது அது முழு நாட்டுக்கும் ஏதாவதொரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூல வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில விடய்ஙகளுக்கு பகிரங்கமாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.
சகல அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.