நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் ஊற்றான சம்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு எடுத்த தீர்மானம் தேசிய குற்றமாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பனரும் பிரசாரச் செயலாளருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
சப்புகஸ்பந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப விவசாயத்துறை மற்றும் தொழிற்சாலைகளை மீள இயங்கச்செய்யும் பாரிய சவால் எமக்கு இருக்கின்றது. ஆனால் ஆட்சியாளர்களால் அது இடம்பெறப்போவதில்லை.
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானித்ததாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதனை மூடினாலும் தேவையான எரிபொருளை எப்படியாவது கொண்டுவருவதாக அவர் தெரிவிக்கின்றார். சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவது தேசிய குற்றமாகும்.
ஏனெனில் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் கொண்டுவருதற்கு பதிலாக மசகு எண்ணெய்யை கொண்டுவந்து இங்கு சுத்திரகரிப்பதன் மூலம், பெற்றோல்,டீசல், மண்ணெண்ணெய். மெழுகுவர்த்தி, உரம் போன்றவற்றை உற்பத்திசெய்து, அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்துகொண்டுவரும் எரிபொருள் செலவை நூற்றுக்கு 40வீதம் வரை குறைத்துக்கொண்டோம்.
அவ்வாறான வருமானத்தை ஈட்டித்தரும் ஊற்றுக்கண்ணான சப்புகஸ்கந்த சுத்திரகரிப்பு நிலையத்தை, முட்டாள் தனமான தீர்மானம் மேற்கொண்டு அமைச்சர் அதனை மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளார்.
நாட்டுக்கு வருமானத்தை கொண்டுவரும் இதனை மூடிவிடுவதற்கு எடுத்த தீர்மானம் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பதிலாக இவர்கள் பொருளாதாரத்தை அழித்து விடுவதற்கே நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அமைச்சு பொறுப்புக்களில் இருந்து விலகிய பின்னரும் இவர்கள் இன்னும் அமைச்சர்களுக்குரிய சிறப்புரிமைகளை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று இலட்சக்கணக்கில் நீர் கட்டணம் செலுத்தாத பல அமைச்சர்கள் இருக்கின்றனர் என்றார்.