விடுதலை புலிகளுடன் தொடர்பு: சிவகங்கயைில் சோதனை!

138 0

சிவகங்கை இளைஞருக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு உள்ளதா? என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) விசாரணை நடத்தினர்.

சிவகங்கையில் விக்னேஸ்வரன் என்பவரது வீட்டில் NIA அதிகாரிகள் 3 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டுனராக பணிபுரியும் விக்னேஸ்வரன் விடுதலை புலிகள் அமைப்பினரின் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை கல்லூரி சாலையில் மன்னர் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் விக்னேஸ்வரன் வீடு அமைந்துள்ளது. அதிகாலை 6.00 மணி அளவில் தேசிய புலனாய் துறை அதிகாரிகள் மூன்று பேர் விக்னேஸ்வரன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டுனராக பணிபுரியும் விக்னேஸ்வரன் விடுதலை புலி இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த விக்னேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் வீட்டில் இருந்த விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புத்தகங்கள் கையேடுகளை கைப்பற்றினர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இச்சோதனை 8.00 மணிக்கு நிறைவு பெற்றுது. மேலும், வழக்கமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறிவரும் கூற்றான ‘சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விக்னேஸ்வரன் நாம் தமிழர் கட்சியின் தொண்டர் என கூறப்படுகிறது. சமீபத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசு தடை விதித்ததற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த அதிரடி சோதனை நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்பியிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.