மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

124 0

பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளடங்களாக மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று(சனிக்கிழமை) பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அனைத்துவித வன்முறை சட்டங்களையும் உடனடியாக நீக்கக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக கல்முனை வீதியூடாக கல்லடிப்பாலம் விளையாட்டு மைதானத்தினை அடைந்து அங்கு பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.