மதுரை எய்ம்ஸ் பணிகளை துரிதப்படுத்த பாராளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்காதது ஏன்?- எடப்பாடி பழனிசாமி

112 0

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது: நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் 38 பேர் உள்ளனர்.

இருப்பினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் விவாதிக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி பிரச்சினைக்காக தமிழக மக்களின் நலன் கருதி பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கும் அளவுக்கு போராட்டம் நடத்தி குரல் கொடுத்தனர். தற்போது தி.மு.க. எம்.பி.க்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஏன் குரல் கொடுத்து பணிகளை துரிதப்படுத்தவில்லை?.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்ததுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தது அ.தி.மு.க. ஆட்சி. அந்த வழக்கில் சிறைக்கு சென்றவர்களை ஜாமினில் எடுத்தது தி.மு.க.வினர். தி.மு.க.வினருக்கும், குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன.

பல குற்ற வழக்குகள் கேரள மாநிலத்தில் உள்ளன. அந்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அ.தி.மு.க. மீது அவதூறு பரப்பப்படுகிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் முடிவானது, வழக்கை காலம் கடத்தும் முயற்சி ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.