ராம்குமார் நாளை நீதிமன்றில் ஆஜர்

370 0

201607050935495977_Ramkumar-prove-that-killer-Scythe-Shirt-blood-through_SECVPFராம்குமாரின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து அவர் எழும்பூர் கோர்ட்டில் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார். சுவாதி கொலை வழக்கில் இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செங்கோட்டை மீனாட்சி புரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீஸ் பிடியில் சிக்கிய போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் சிகிச்சைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அடையாள அணி வகுப்பும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ராம்குமாரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

நேற்று முன்தினம் மாலையில் போலீஸ் காவல் முடிந்து ராம்குமார் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ராம் குமாரின் நீதிமன்ற காவல் நாளை (18-ந்தேதி) யுடன் முடிகிறது. இதையடுத்து அவர் எழும்பூர் கோர்ட்டில் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது ராம்குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட உள்ளது.

சுவாதி கொலை வழக்கில், அரசியல் கட்சியினரும், ராம்குமாரின் குடும்பத்தினரும், பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றமற்றவர் என்று நிரூபிப்போம் என அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.இந்நிலையில் சுவாதி கொலை வழக்கில், ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை போலீசார் முழுமையாக திரட்டி வைத்துள்ளனர்.

கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், ராம்குமார் சூளைமேட்டில் தங்கி இருந்ததை உறுதிபடுத்தும் சாட்சிகள் ஆகியோரையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.இவர்கள் அளித்த தகவல்கள் மற்றும் ராம்குமார் கூறிய வி‌ஷயங்கள் ஆகியவற்றை போலீசார் வழக்குக்கு தேவையான முக்கிய ஆதாரங்களாக்கியுள்ளனர்.

சுவாதியை கொலை செய்ய ராம்குமார் பயன்படுத்திய அரிவாள், அவர் அணிந்திருந்த ரத்தக்கரை படிந்த சட்டை ஆகியவையும் இந்த வழக்கில் முக்கிய தடயங்களாக உள்ளன. இவைகள் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சுவாதி கொலை வழக்கில் இதுவரை திரட்டப்பட்ட அத்தனை தகவல்களையும் போலீசார் குற்றப்பத்திரிகையாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் தான் குற்றவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் தேவையான தடயங்களையும், ஆதாரங்களையும் திரட்டி வைத்துள்ளோம். இந்த வழக்கை 2 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வழக்கை முடித்து ராம்குமார்தான் கொலையாளி என்பதை கோர்ட்டில் நிரூபிப்போம் என்றார்.