பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார்.
ஆனால் நாட்டின் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள கடன் பெற்ற நாடுகளுடன் மேற்கொண்டிருக்கும் இணக்கப்பாடுகள் மற்றும் நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள சர்வதேச நாடுகளுடன் மேற்கொண்டுவரும் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் இணக்கப்பாடுகள் தொடர்பில் தகவல் தெரியாமல் எமக்கு ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள முடியாது.
அத்துடன் நாட்டை கட்டியெழுப்ப மேற்கொள்ளவேண்டிய பல விடயங்களை ஜனாதிபதி தனது உரையில் தவறவிட்டுள்ளார். அதனால் நாட்டை கட்டியெழுப்புவதற்கான முக்கியமாக 20 விடயங்களை முன்வைக்கின்றாேம் என எதிர்க்கட்சித்த தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கலந்துரையாடி வருகின்றது. அதன் முதற்கட்டமாக ஊழியர் மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதேபோன்று இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எதிர்வரும் 4வருடங்களுக்குள் 2.9 பில்லியன் டொலர் வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டத்துடன் அரசாங்கம் உடன்படிக்கை செய்திருப்பதா அல்லது இணக்கப்பாடுக்கு வந்திருக்கின்றதா என சரியான தகவல் இல்லை. என்றாலும் புரிந்துணர்வு இல்லாமல் சர்வதேச நாணய நிதியம் 2.9பில்லியன் டொலர் வழங்குவதாக அறிவிப்பதில்லை.
அதேபோன்று கடன் மறுசீரமைப்பு தொடர்பாகவும் நிதி உதவிகள் தொடர்பாகவும் அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடி வருகின்றது.
இந்த கலந்துரையாடல்களின் முன்னேற்றம் என்ன? இந்த விடயங்களை சமர்ப்பித்து, அரசாங்கம் வழிகாட்டலை (ராேட் மெப்) தெரிவிக்கவேண்டும்.
அத்துடன் அரசாங்கம் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை மக்கள் மீது வரி சுமத்தி கட்டியெழுப்ப முயற்சிக்கின்றது.
வங்குராேத்த அடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது சாதாரண விடயம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் இதனை மாத்திரமே செய்ய முடியாது. அதனால் நாட்டின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை முன்வைக்கவேண்டும். இதுதொடர்பில் ஜனாதிபதி எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
மாறாக அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி, முதலீடுகளை குறைத்து, இறக்குமதிகளை கட்டுப்படுத்தி இந்த பிரச்சினைகளில் இருந்து மீள முயற்சிக்கின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மக்கள் இன்னும் பாதிக்கப்படுவார்கள்.
அதனால் பிரச்சினையில் இருந்து மீள நாட்டுக்கு பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் தேவையாகும்.
மேலும் வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ளது. பணவீக்கம் பாரியளவில் உயர்ந்து செல்கின்றது. உணவு பணவீக்கம் நூற்றுக்கு 100வரை அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வுகாண உற்பத்தி வீதத்தை அதிகரிக்கவேண்டும்.
ஆனால் ஜனாதிபதியின் உரையில் வாழ்க்கைச்செலவை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இருக்கவில்லை.
அதேபோன்று வறுமை நிலை அதிகரித்து செல்கின்றது.இந்த நிலை இன்று மத்திய வகுப்பினருக்கும் ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் தொகையில் 60, 70 வீதமானவர்கள் வறுமை நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். அதனால் மக்கள் பாரியளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அதனால் இதற்கு தீர்வாக எமது நிதியங்களை வறுமை கோட்டில் இருப்பவர்களுக்காக அர்ப்பணிக்கவேண்டும். இதுதொடர்பாகவும் எந்த விடயமும் ஜனாதிபதியின் உரையில் இல்லை.
அத்துடன் மந்தபோஷணை வீதம் அதிகரித்துள்ள, பட்டினி நிலைமை ஆசியாவில் எமது நாடு இரண்டாவது இடத்தில் உலகில் 6ஆவது இடத்தில் இருக்கின்றது.
அதனால் மந்த போஷனத்தை இல்லாமலாக்க அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அடுத்ததாக சுகாதாரத்துறை பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது.
மருந்து பொருட்கள் இல்லாமல் வைத்தியசாலை கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. சிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மருந்து பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வில்லை.
எதிர்க்கட்சியில் இருநதுகொண்டு நாங்கள் நாட்டில் இருக்கும் வைத்தியசாலைகளுக்கு 1597இலட்சம் ரூபாவுக்கான வைத்திய உபகரணங்களை வழங்கி இருக்கின்றோம்.
அத்துடன் தொழில் அற்றவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. அதனால் இளைர்கள் நாட்டை விட்டு செல்லும் நிலை அதிகரித்திருக்கின்றது. இதற்கு தீர்வு இல்லை. கடன் சுமையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனி நபர் கடன் சுமை அதிகரித்துள்ளது. 2019 தனிநபர் கடன் சுமை 597695ஆக இருந்தது. 2022 ஏப்ரல் ஆகும் போது அது 10இலட்சத்தி 52ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாகவும் எந்த திட்டமும் இல்லை.
எனவே நாட்டை கட்டியெழுப்பும் எமது திட்டங்களில் அடுத்த விடயங்களாக, ஏற்றுமதி அதிகரிப்பை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை,மூலப்பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு, குற்றச்செயல் அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை, ஊழல் மோசடிகளை இல்லாமலாக்கும் வேலைத்திட்டம். ஏற்படுத்தப்படவேண்டும்.
அத்துடன் உணவுப்பாதுகாப்புக்கு அரசாங்கத்திடம் வேலைத்திட்டம் இல்லை. 63இலட்சம் பேர் உணவு பாதுகாப்பு இல்லாத பிரச்சினைக்கு ஆளாகி இருக்கின்றனர். இதுதொடர்பாகவும் அரசாங்கத்திடம் நடவடிக்கை இல்லை.
சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை பாதுகாக்க திட்ம் இல்லை. சுற்றுலாத்துறை, நிர்மாணத்துறை இடைநிறுத்தப்பட்டடுள்ளன.
வீழ்ச்சியடைந்திருக்கும் கல்வியை மீள கட்டியெழுப்ப, புத்திஜீவிகள் நாட்டை விட்டு செல்வதை தடுப்பதற்கு, அபிவிருத்தியை மீள கட்டியெழுப்ப மற்றும் ஜனநாயகத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் உரையில் எதுவும் இல்லை.
அதனால் நோடை கட்டியெழுப்புல் வேலைத்திட்டத்தில் இந்த விடயங்களை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம். என்றார்.