எந்த வடிவத்தில் ஆக்கிரமிப்பு வந்தாலும் தொடர்ந்து எங்களது திரட்சியையும் , எதிர்ப்பையும் காட்டுவதன் மூலம் மட்டுமே எங்களுடைய தாயக பூமியை பாதுகாக்க முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.
தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் கொழும்பில் இருந்து வந்த குழு ஒன்று குருந்தூர் மலை பகுதியை ஆக்கிரமிக்க இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு இன்று (7) நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து வந்திருக்கின்ற ஒரு விஷேட குழு எந்தவித முன்னறிவிப்புமின்றி குருந்தூர்மலை தமிழருடைய தாயக பூமியை ஆக்கிரமிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் எங்களுக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து உடனடியாக நாங்கள் இங்கே திரண்டு வந்திருக்கின்றோம்.
நாங்கள் இங்கே வந்ததன் பிற்பாடு அதற்கான ஆயத்தங்கள் கைவிடப்பட்டிருப்பதாக உணர்கின்றோம். ஆனால் வந்த குழுவினர் இந்த நிமிடம் வரை முல்லைத்தீவிலே முகாமிட்டு இருப்பதாக நம்பகமான தகவல்கள் தொடர்ந்தும் கிடைக்கபெற்று கொண்டிருக்கின்றன.
எங்களை பொறுத்தவரையிலே தமிழர் தாயகத்திலே ஒரு அங்குலமேனும் சிங்கள பௌத்த பேரினவாதம் ஆக்கிரமிப்பதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பது கிடையாது.
தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். எந்த வடிவத்தில் ஆக்கிரமிப்பு வந்தாலும் நாங்கள் தொடர்ந்து எங்களது திரட்சியையும் , எதிர்ப்பையும் காட்டுவதன் மூலம் மட்டுமே எங்களுடைய தாயக பூமியை பாதுகாக்க முடியும். அந்த வரலாற்று கடமையை தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்.