சென்னையின் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.16.19 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் மற்றும் ரூ.4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டு திடல்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டன.
அந்தவகையில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதன்படி திருவொற்றியூர்-2, மாதவரம்-8, தண்டையார்பேட்டை-1, ராயபுரம்-1, திரு.வி.க. நகர் -3, அம்பத்தூர்-7, வளசரவாக்கம்-7, அடையாறு-3, பெருங்குடி-1, சோழிங்கநல்லூர்-9 என மொத்தம் 42 புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த பூங்காக்களில் குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், பாரம்பரிய மர வகைகள், கழிவறை மற்றும் குடிநீர் வசதி உள்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதேபோல் திருவொற்றியூர்-5, ராயபுரம்-1, வளசரவாக்கம்-1, பெருங்குடி-2, சோழிங்கநல்லுர்-2 என மொத்தம் 11 இடங்களில் விளையாட்டு திடல்கள் அமையவுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட்டு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.