பிணைமுறி ஊழல் மோசடியின் முக்கிய சூத்திரதாரியாக குறிப்பிடப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் குற்றவாளிகள் பரிமாற்றல் சட்டம் தடையாக உள்ளதா அல்லது வேறு காரணிகள் தடையாக உள்ளதா என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய சபையில் கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (05) இடம்பெற்ற இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடையில் குற்றவாளிகளை மீள ஒப்படைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பிணைமுறி மோசடியின் முக்கிய சூத்திரதாரி என குறிப்பிடப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை ஆட்சிக்கு வந்து ஒருசில மாதங்களில் நாட்டுக்கு அழைத்து வந்து,சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவோம் என ஸ்ரீ வங்கா பொதுஜன பெரமுன தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிங்கப்பூர் நாட்டுடனான குற்றவாளிகள் பரிமாற்றல் சட்டம் தடையாக உள்ளதா,அல்லது வேறெதும் காரணிகள் தடையாக உள்ளதா,இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..
அரசாங்கம் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக சட்டம் மற்றும் அதனுடனான தாபனஙகளை பயன்படுத்திக்கொள்கிறது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தான் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்படுகிறதார்கள்.
மக்கள் போராட்டத்தை தடுக்க அரசாங்கம் அதிகாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.மக்கள் போராட்டத்தில் ஈடுப்படுவதால் நாட்டின் நாமம் பாதிக்கப்படாது மாறாக மக்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின் தான் நாட்டின் நாமம் பாதிக்கப்படும் என்றார்.