மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நிலங்கள் தந்திரமாக அபகரிப்பு

186 0

மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நிலங்களை தந்திரமாக அபகரிக்கும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அப்பகுதியில் பூர்வீகமாக வாழும் மக்களுக்கு உரிய காணிகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற நிலையியல் கட்டளைகள் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சட்டக் கல்லூரி பரீட்சையின் போது  மாணவர்கள தங்களின் தாய் மொழியில்  தோற்றுவதற்கு  ஏற்கெனவே  அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் தற்போது  ஆங்கில மொழி மூலம் மாத்திரம் பரீட்சை எழுதும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் நீதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பிரதம நீதியரசருக்கு அறிவித்துள்ளதாகவும் அதன்படி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரதேசத்திற்குரிய கோத்தாபய கடற்படை முகாம் காணி தொடர்பில் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

அந்த முகாம் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் உருவாக்கப்பட்டது. அரச மற்றும்  தனியார் காணிகள் அடங்கலாக 671 ஏக்கர் நிலத்தை அங்கே கடற்படை தம் வசம் வைத்துள்ளது.

அங்கு தனியார் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த போதும் அதற்கு எந்தத் தீர்வும்  இதுவரை கிடைக்கவில்லை.

அங்கு மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் போராட்டங்களால் அங்கு நில அளவை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட போதும் கொழும்பில் இருந்து செல்லும் அதிகாரிகளை கொண்டு அந்த காணிகளை அளந்து கையகப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 6 கிராம அலுவல்கள் பிரிவுகளை மீண்டும் மகாவலியுடன் இணைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

முன்னர் அமைச்சராக இருந்த சமல் ராஜபக்‌ஷவுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய அந்த நடவடிக்கைகளை அவர் இடைநிறுத்தியிருந்தார். ஆனால் மீண்டும் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த பின்னர் எங்கள் கட்சியினர் அவரை சந்தித்த போது அரசியல் கைதிகளின் விடுதலை, மகாவலி வலய விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூறியிருந்தேன்.

அப்போது தனது செயலாளருக்கு அது தொடர்பில் அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தார். ஆனால் எதிர்வரும் நாட்களில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த பகுதிகளை மகாவலியுடன் இணைக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை, ஸ்தீரமற்ற அரசாங்கம் போன்ற தெற்கில் நெருக்கடி நிலைமைகள் இருக்கையில் வடக்கில் நிலங்களை தந்திரமாக அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இதனால் மகாவலி எல் வலயம் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதியும், அவரின் செயலாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அங்கு  பூர்விகமாக உள்ள மக்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.