வடக்கு போல் தெற்குக்கும் தீ வைக்காதீர்!

152 0

வடக்கில் தீ வைத்து தமிழ் இளைஞர் – யுவதிகளை அழித்தது போல் தெற்கிலும் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம். தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்பதற்கு இடமளியுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பஸ்குவல் வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04) நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய இரா.சாணக்கியன் எம்.பி., ‘போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் – யுவதிகளை அடக்குவதற்கு அரசு அவர்களைப் பின்தொடர்கின்றது.

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அரசு செயற்பட்டால் அதன் பிரதிபலனை வெகுவிரைவில் அனுபவிக்கும்’ என்று தெரிவித்த போதே குறுக்கிட்டு இவ்வாறு வேண்டுகோள் விடுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி. அனுர பஸ்குவல் மேலும் பேசுகையில்,

“மாணவர்களைத் தூண்டி விடும் வகையில் உரையாற்றி மாணவர்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம். வடக்கில் உசுப்பேற்றும் உரைகளை நிகழ்த்தி அங்கு வைத்து தமிழ் இளைஞர் – யுவதிகளை அழித்தது போல் தற்போது தெற்கில் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம்.

தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்பதற்கு இடமளியுங்கள். அதனை விடுத்து மாணவர்களைத் தூண்டி விட்டு அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்க வேண்டாம். நீங்கள் கல்வி கற்கும் காலத்தில் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

மாணவர்களைச் சிறைக்கு அனுப்பும் வகையில் நிலைமைகளைத் தோற்றுவிக்க வேண்டாம். அதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் சந்ததியினர் வடக்கில் இதனையே செய்தார்கள்.

மாணவர் போராட்டம் என்ற பெயரில் கடந்த காலங்களில் நாட்டில் தீவிரவாதச் செயற்பாடுகளே இடம்பெற்றன. எனவே, வடக்கு போல் தெற்குக்கும் தீ வைக்காதீர்கள்” – என்றார்.