புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளை சட்ட விராேதமான முறையில் உபயோகிப்போர் மற்றும் அக்காணிகளில் குடியிருப்போர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறான சட்டவிராேத செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமானம் இல்லாமல் போயுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, ஆளும் கட்சி உறுப்பினர் கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளில் குத்தகை ஒப்பந்தம் இல்லாமல் சட்டவிராேதமான முறையில் குடியிருப்பது மற்றும் அதனை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான சொத்துக்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக விசேட நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக அந்த இடங்களை உபயோகிப்பவர்கள் என இரண்டு பகுதியாக அவர்களை பார்க்க வேண்டி உள்ளது.
அது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான இடங்கள் முகாமைத்துவம் செய்யப்படும். அந்த இடங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.
இவ்வாறான சட்டவிராேத செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமானம் இல்லாமல் போயுள்ளதுடன் ரயில்வே துறை அபிவிருத்திக்கும் இது பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது.
அவ்வாறு குடியிருப்போரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரதேச பொறியியலாளர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்வர். அல்லது புகையிரத பொது முகாமையாளர் அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவார் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட வாசுதேவ நாணயக்கார எம்.பி,
நீண்ட காலமாக புகையிரத திணைக்கள காணிகளில் குடியிருப்போர் தொடர்பில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? அவர்களுக்கு வேறு இடங்களில் குடியிருப்புகள் வழங்கப்படுமா? அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் அவ்வாறானவர்களுக்கு மாற்று வழி ஒன்று ஏற்படுத்தப்படும் என்றார்.