மனித வாழ்வியலுக்கு அகத்தியமான வீரம், செல்வம், கல்வி போன்றவை வேண்டி நவராத்திரி வழிபாடானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வி நிறுவகமாகப் பணியாற்றிவரும் தமிழ்க் கல்விக் கழகமும் அதன் 90க்கு மேற்பட்ட தமிழாலயங்களும் மாணவர்களின் கல்வி சிறக்க வேண்டி, வாணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. விசயதசமி நாளான இன்று (04.10.2022) தமிழ்க் கல்விக் கழகத்தின் நடுவச்செயலகத்தில் பொறுப்பாளர், பிரிவுசார் பொறுப்பாளர்கள், துணைப்பொறுப்பாளர்கள், முன்னிலைச் செயற்பாட்டாளர்கள், நடுவச்செயலகத்தின் அயலிலுள்ள பெற்றோர்கள் எனப் பலரும் இணைந்து வாணிவிழாவைக் கொண்டாடினார்கள்.
விசயதசமி நாளன்று மிகச் சிறப்பாகக் கருதப்படுவது ஏடு தொடக்கும் நிகழ்வாகும். தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் திரு. இராஜமனோகரன் அவர்கள் தமது மடியில் மழலைகளை இருத்தி, அவர்களின் சுட்டு விரலைப் பிடித்து, சிவப்புப் பச்சையரிசியில் உயிர் எழுத்துப் பன்னிரண்டையும் எழுதியும் சொல்லியும் கொடுத்து, குழந்தைகளின் கல்வி கற்றலுக்கான முதற்படியைத் தொடக்கிவைத்தார்.
பத்து நாட்கள் கொண்டாடப்பட்டுவரும் வாணிவிழாவை, தமிழாலயங்கள் தமது வசதிக்கேற்பத் தமிழாலயங்கள் நடைபெறும் நாட்களில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றுகூடி, கலைமகளுக்குப் பொங்கல், சுண்டல், வடை, மோதகம் போன்ற பல பண்ணியங்களையும் முக்கனிகளையும் சேர்த்துப் படைத்து வழிபட்டனர். தமிழாலய மாணவர்களும் கலை பயிலும் மாணவர்களும் தாம் கற்ற கலைகளை நிகழ்வுகளாக்கி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சில தமிழாலயங்கள் வழிபாட்டுடன் இணைந்து, அரங்க நிகழ்வுகளையும் நடாத்தி மகிழ்ந்தன.
தமது பிள்ளைகளின் கல்வியில் மிகவும் அக்கறையோடு இருக்கும் எமது பெற்றவர்கள், தங்கள் மழலைகளை விசயதசமி நாளன்று தமிழாலயத்திற்கு அழைத்து வந்தார்கள். அங்கு மூத்த பட்டறிவுத்திறன்மிக்க ஆசிரியர், தனது மடியில் குழந்தையை இருத்தி, தட்டிலுள்ள சிவப்புப் பச்சை அரிசியில் குழந்தையின் சுட்டு விரலைப் பிடித்து, உயிர் எழுத்துகள் பன்னிரண்டையும் அகரம் தொடங்கி ஒளகாரம்வரை எழுதியதோடு, சொல்லிக் கொடுத்து, குழந்தையின் தொடக்கக் கல்வியைத் தொடக்கிவைத்தார்.
விசயதசமியன்று பரதம், வாய்ப்பாட்டு, வீணை, மிருதங்கம் போன்ற கலைகளைப் பயில ஆர்வமுள்ள தமிழாலய மாணவர்கள் தமிழாலயக் கலைவகுப்புகளில் இணைந்து, தமக்கு விரும்பிய கலைகளைக் கற்கத் தொடங்கினார்கள். இது மதம்சார்ந்த விழாவாக இருப்பினும் தமிழாலய மாணவர்களின் கல்விச் சிறப்பை வேண்டி வழிபடும் விழாவாகையால் தமிழாலயங்கள் இவ்விழாவைக் கொண்டாடி வருகின்றன.