சர்வதேசமென்ற அடைமொழி சேர்க்கப்பட்ட ஊடகங்களில் மீண்டும் ஈரான் பேசுபொருளாகி இருக்கிறது. சமூக ஊடகங்களிலும் ஈரான் பற்றிய எண்ணற்ற பதிவுகள்.
சர்ச்சைக்குள்ளான விடயம் வேறொன்றும் அல்ல. இஸ்லாமிய நெறிமுறைகளின் பிரகாரம், பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற கலாசார ஆடைபற்றியதாகும்.
இந்த விவகாரத்தில் ஈரான் சாக்காடாக மாறியுள்ளனெக் காட்டுவதில், ‘சர்வதேச’ ஊடகங்கள் மத்தியில் போட்டா போட்டி காணப்படுகிறது.
ஒட்டுமொத்த ஈரானும் ஹிஜாப்பை எதிர்க்கிறது, ஈரானிய மக்கள் ஆவேசமாக கிளர்ந்து எழுந்துள்ளார்கள். அரசின் அடக்குமுறையில் நூற்றுக்கணக்கானோர் பலி என்றெல்லாம் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
சர்வதேச ஊடகங்களின் ‘நிறந்தீட்டப்பட்ட சாளர கண்ணாடிகள்’ ஊடாக, எமக்குத் தெரியாத ஈரானில் நடப்பவற்றைப் பார்க்கிறோம். அந்த மாயத் தோற்றத்தைக் கொண்டு இதுதான் ஈரான் எனத்தீர்மானிப்பது துரதிஷ்டம்.
ஹிஜாப் என்பது சர்வதேச ஊடகங்களைப் பொறுத்தவரையில், பெண்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அடக்குமுறை. காட்டுமிராண்டித்தனத்தின் எச்சம் என்ற நிலைப்பாட்டை அடியொற்றியதாகும்.
இந்த ஆடை, பெண்களின் பாதுகாப்பு கருதி இஸ்லாம் எடுத்துரைத்த கண்ணியமான ஆடையின் ஓரம்சம், அதனைத் தாண்டி பாரசீகர்களின் கலாசாரம் எனக் கருதுவோரும் உண்டு.
இருமுனைகளுக்கு நடுவில், ஹிஜாப் என்ற ஆடையையும், அதை கட்டாயப்படுத்துவது தொடர்பான சட்டத்தையும் எந்த இடத்தில் வைப்பது என்ற விவாதத்தை ஈரானிய பிரச்சினை தூண்டி விட்டுள்ளது.
சமகால பிரச்சினையின் ஆரம்பப்புள்ளி, 22வயதுடைய குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஈரானியப் பெண்ணான மாஹ்சா அமீனி என்பவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் மரணத்தைத் தழுவியமையாகும்.
ஈரானில், மத மற்றும் கலாசார ஒழுக்கநெறிமுறைகளைப் பாதுகாப்பதற்காக தனியான பொலிஸ்பிரிவொன்று உள்ளது.
அமீனி, தனது ஹிஜாப்பை அணியவில்லை என்பதால், அவரைப் பொலிஸார் கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த சமயத்தில் அமீனி மயக்கம் வந்து விழுந்து மரணத்தைத் தழுவினார்.
கலாசாரப் பொலிஸார் அமீனியை கடுமையாக தாக்கியதாகவும், தலையில் பலமாக அடிபட்டதால் அவர் மயக்கமுற்று கோமா நிலையை அடைந்து மூன்று நாட்களில் மரணமுற்றதாகவும் பரவலாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்தக் குற்றத்தை நிரூபிப்பதற்கு ‘சர்வதேச ஊடகங்கள்’ அயராது பாடுபடுகின்றன. அமீனியின் பெற்றோரை மேற்கோள்காட்டி, அவருக்கு எதுவித நோயும் இருக்கவில்லை என்ற செய்திகளும் வெளியிடப்படுவதோடு, மருத்துவர்களையும் சாட்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுவொரு கோழைத்தனமான குற்றச்சாட்டென ஈரானிய பொலிஸார் மறுத்துரைக்கிறார்கள். அமீனி தாக்கப்படவில்லை. அதிகாரிகள் தவறு செய்யவும் இல்லை. தடுத்து வைக்கப்படுபவர்களைத் தாக்கும் அளவிற்கு கேடுகெட்டவர்கள் அல்லவதென பொலிஸ் தலைமை அதிகாரி கோபத்துடன் சாடுகிறார்.
கலாசாராப் பொலிஸாரின் காவல் நிலையத்திற்கு அமீனி அழைத்துச் செல்லப்பட்டது உண்மையே. ஹிஜாப் தொடர்பான ஒழுக்கநெறிமுறைகள் பற்றி விளக்கம் அளிப்பதற்காகவே, பொலிஸார் அவரை அழைத்துச் சென்றார்கள் என்கிறார் தலைமை அதிகாரி.
அமீனியின் மரணத்தைத் தொடர்ந்து கலாசாரப் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட ஒழுக்க வகுப்பில் அமீனி அமர்ந்திருக்கும் காட்சியை பொலிஸார் வெளியிட்டார்கள். அந்த யுவதி பிரச்சினையின்றி அமர்ந்திருப்பதும், திடீரென மயங்கி விழுவதும் சீசீரிவி கமராவில் பதிவாகியிருந்தது.
கமரா காட்சி எடிட் செய்யப்பட்டதென அமீனியின் தந்தையார் கூறியதாக ‘சர்வதேச’ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொலிஸார் கூறுவதைப் போல, அமீனிக்கு பாரிசவாதம் எதுவும் இருக்கவில்லையென தந்தையார் குறிப்பிட்ட கருத்திற்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்தன.
சமகால ஈரான் என்பது தாம் விரும்பாத ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து, இஸ்லாமிய புரட்சியின் ஊடாக தாம் விரும்பிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வரித்துக் கொண்டு, ஈரானிய மக்கள் கட்டியெழுப்பிய தேசமாகும்
இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து, ஈரானிய மக்கள் இஸ்லாம் என்ற மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறையை தமக்குப் பொருத்தமானதாகக் கருதி அவற்றை ஏற்றுக்கொண்டார்கள். இஸ்லாம் போதித்த விதிமுறைகளை தமது சட்டங்களாக ஆக்கிக் கொண்டார்கள்.
ஒரு ஜனநாயக நடைமுறையின் ஊடாக, தமது தேசம் ‘மதச்சார்பற்றதாக’ இருக்க வேண்டுமெனக் கருதி, அதனை அரசியல்யாப்பில் சேர்த்துக் கொள்ள பிரான்ஸ் மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் எந்தளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை ஈரானிய மக்களுக்கும் உண்டு.
பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் அரச குடும்பத்தை பராமரிப்பதில் சிக்கல் இருந்தால் என்ன, வரலாற்று மரபின் தொடர்ச்சியாக முடியாட்சி முறை தொடர வேண்டும் என்று பிரித்தானிய மக்கள் கருதலாம். அது ஜனநாயக ரீதியில் ஏற்கப்படுமானால், மற்றவர்கள் எவ்வாறு விமர்சிக்க முடியாதோ, அதுபோலத்தான் ஈரானின் இஸ்லாமிய கோட்பாடுகளும்.
இஸ்லாமிய புரட்சி நிகழ்ந்து ஒரு மாதத்திற்கு பின்னர், ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஹிஜாப் பற்றி பேசினார். அரச கட்டடங்கள் போன்றவற்றிற்குள் ஹிஜாப் அணியாத பெண்களை அனுமதிக்க முடியாதென அவர் கூறியதை அடுத்து, ஹிஜாப் விதிமுறை பின்பற்றப்படுகிறது
அன்று அதை ஆட்சேபித்து ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஹிஜாப் விதிமுறை கட்டாயமாக்கப்படக்கூடாது என்பது பெண்களின் கோஷமாக இருந்தது. எனினும், இரு மாதங்களுக்குப் பின்னர், ஈரானை இஸ்லாமிய குடியரசாக மாற்ற வேண்டுமா என்று கேட்கும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பில் வாக்களித்தவர்களில் 97சதவீதமான மக்கள், ஈரான் இஸ்லாமிய குடியரசாக மாற வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து வாக்களித்தார்கள். அங்கு பெரும்பாலான மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜனநாயக ரீதியில், இஸ்லாமிய குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
இங்கு இஸ்லாமிய குடியரசு என்பதன் அர்த்தம், இஸ்லாமிய சட்டதிட்டங்களின் பிரகாரம் ஆட்சி செய்தல் என்பதாகும். இந்த ஆட்சிக் கட்டமைப்பில், ஈரானிய மக்களின் வாழ்;க்கையையும், சொத்துக்களையும் மாத்திரன்றி, மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்தப் பொறுப்பிற்குள் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் குடும்பத்தையும், சமூகக் கட்டமைப்பையும் கட்டிக்காக்க ஆண்களும், பெண்களும் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் என்று ஈரானிய ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு கருதும் பட்சத்தில், அது இஸ்லாமிய குடியரசை விரும்பிய மக்களின் நாட்டமல்லவா?
ஹிஜாப்பை கட்டாயமாக்கும் விதிமுறைகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், தனிநபர் சுதந்திரம் என்பதன் அடிப்படையில் வாதிடுகிறார்கள். இதற்குள், எனது உடல் எனது உரிமை என்ற மாதிரியான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
நான் ஹிஜாப் அணிவதா இல்லை என்பதை நானே தீர்மானிக்க வேண்டும். அது அரசாங்கம் என் மீது திணிக்கும் விடயமல்ல என ஒரு தனிநபர் வாதிடுவதில் தவறில்லை. அது தனிநபர் சுதந்திரத்திற்கு ஆட்சிக் கட்டமைப்பில் முக்கியத்துவம் வழங்கிய ஒரு லிபரல் ஜனநாயக தேசத்தில் தவறாக அமையாது. ஆனால், ஈரானில்?
‘மன்னராட்சி மிகவும் மோசமானதென்பதால் அதை நாம் இல்லாதொழித்து விட்டோம். நம்மைப் பின்பற்றி பிரித்தானியாவும் அதை இல்லாதொழித்து விட வேண்டும். இல்லாவிட்டால், பிரித்தானியா ஜனநாயகம் அறியாத காட்டு மிராண்டிகள்’ என்று ஈரானிய மக்கள் சொல்வதற்கு சமமானதாக உள்ளது.
ஹிஜாப் சட்டம் சர்ச்சைக்குரியது என்றால், அது அமுலாக்கப்படும் விதத்தை மாற்ற வேண்டும் என்று கோருவோர் உண்டு. சட்டம் பிரச்சனையல்ல, சட்டத்தை நிலைநாட்டும் கலாசார பொலிஸார் தான் பிரச்சினை என்று சொல்லி, அந்தப் பொலிஸ்பிரிவை திருத்த வேண்டும் அல்லது கலைக்க வேண்டும் என்போரும் இருக்கிறார்கள்.
இந்த ‘சர்வதேச’ ஊடகங்கள் இத்தகைய வாதங்களை பகிரங்கப்படுத்துவது கிடையாது. மாறாக, ஈரானிய மக்கள் பெருமளவில் கிளர்ந்தெழுந்து ஆட்சி மாற்றத்தைக் கோருகிறார்கள் என்ற சித்திரத்தை உருவாக்குவதை தலையாய நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றன.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை