இந்திய அரசாங்கம் வடக்கில் அரசியல் கட்சிகளையும் அரசியல் அமைப்புக்களை யும் உருவாக்கி அவர்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்குகின்றது. இதன் பின்னணியில் இந்திய றோ செயற்படுகின்றது எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இந்தியாவை நம்பிக்கொண்டிருக்கின்றவர்கள் அவற்றில் இருந்து விடுபட்டு மீண்டெழ வேண்டும் என தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்கவிடம் இந்திய அரசின் இலங்கை மீதான நிலைப்பாடு தொடர்பாக கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,இந்தியாவானது இலங்கையுடன் ஒப்பிடுகின்ற போது சகலதுறைகளிலும் மிகவும் கீழ்மையான நிலையிலேயே உள்ளது.
குறிப்பாக கல்வி. சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு, பொருளாதார, சமூக கட்டமைப்பு என சகலவற்றிலும் கீழ்மையான நிலையிலேயே உள்ளது. இதனால்தான் இந்தியா இலங்கையின் கடல்வளத்தை, பொருளாதாரத்தை, அதுசார்ந்த வளங்களை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றது.
இதனடிப்படையில் இலங்கைக்கு இந்தியா கடன்களை வழங்கி அதாவது மதவா ச்சியில் இருந்து தலைமன்னார் வரை, ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரை, துரையப்பா விளையாட்டரங்கு என அனைத்தையும் செய்வது இங்குள்ள வளங்களையும் பொருளாதாரத்தையும் தன் வசப் படுத்தவே தவிர, இங்குள்ளவர்களுக்கோ, அல்லது வடக்கு மக்களிற்காகவோ அல்ல.
மேலும் திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள இலங்கை எரிபொ ருள் கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் குதங்களை இந்திய ஐ.ஓ.சி நிறுவனம் கைப்பற்றிக்கொண்டது.
அதுபோல புல்மோட்டையிலுள்ள கனிய மணல்களை இந்தியா கைப்பற்றிக்கொண்டது. நீலாவரை கடற்கரையில் இந்திய உல்லாச விடுதிகளை அமைப்பதற்காக கைப்பற்றியுள்ளது. இவற்றால் இலங்கையில் பாரிய இழப்புக்கள் ஏற்படுவதுடன் அரசாங்கத்திற்கு பாதகமாகவும் உள்ளது.
யுத்தத்தின் பின்னர் இலங்கைமீது இந்தியா பாரிய திட்டங்களை வகுத்துள்ளது. இதில் கடல்தொழில் பிரதானமானது. அவர்களுக்கு தேவைப்படும் வளங்களை அடைவதற்கு அரசியல் ரீதியாகவும் முயற்சிக்கின்றார்கள். இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதனூடாக இலங்கையின் கடல் வளத்தில் மீன்கள் உருவாகுவதற்கான சூழல் இல்லாமல் செய்யும் வகையில் கடல்வளங்களை அழிக்கின்றார்கள்.
அவ்வாறு இந்திய மீனவர்களது வருகை யும் அவர்களது மீன்பிடி நடவடிக்கையை யும் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு இங்கு இல்லை. அவர்கள் கேட்டவுடன் இலங்கை அரசாங்கம் அடிபணிகின்றது. இந்தி யாவினுடைய வழிநடத்தலிலேயே இங்குள்ளவர்கள் உள்ளனர்.
மேலும் வடக்கையும் யாழ்ப்பாணத்தையும் நோக்குகையில் அரசியல் கட்சிகளையும் அரசியல் அமைப்புக்களையும் உருவாக்கி அவற்றுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கி விடுகின்றனர். இவற்றை இந்திய றோ அமைப்பினர் செயற்படுத்தி வருகின்றனர். இதுதான் உண்மை.
இந்தியா வடக்கு மக்களை காட்டி அரசாங்கத்திடமிருந்து தனது தேவைகளை செய்கின்றது. எனவே, இந்தியா நம்மை பாதுகாக்கும் என நம்புகின்றவர்கள், இந்தியாவின் பின்னால் ஓடுபவர்கள் அதிலிருந்து விடுபட்டு மீண்டெழ வேண்டும். மேலும் இந்தியாவினுடைய ஆக்கிரமிப்பை இல்லாது செய்வதற்கு மக்கள் முன்வர வேண்டும். மக்களுடைய சக்தி மூலமாக அதனை தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.