‘ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்பில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி அதனை நாம் ஏற்கப் போவதில்லை. சமரசத்துக்கு இங்கு இடமில்லை. ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறை இலங்கை ஆயுதப் படையினர் மீது நாட்டுக்கு வெளியே வழக்குத் தொடர இடமளிக்கிறது. இதனை எம்மால் ஏற்கமுடியாது” – அமைச்சர் அலி சப்றி.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இந்த வாரம் 50:1 இலக்கத் தீர்மானம் விவாதிக்கப்பட்டு 47 உறுப்புரிமை நாடுகளின் வாக்கெடுப்பு இடம்பெறும். தீர்மானத்தை முன்மொழிந்த ஏழு அனுசரணை நாடுகளும் அதனை நிறைவேற்ற முடியுமென்ற பூரணமான நம்பிக்கையில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
ஆனால், இலங்கை அரசைப் பொறுத்தளவில் தீர்மானம் நிறைவேறினாலும் அதனை ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. பேரவையின் கூட்டத்தொடர் கடந்த மாத ஆரம்பத்தில் தொடங்குவதற்கு முன்னரே இலங்கையின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி அறிவித்துவிட்டார்.
30:1, 46:1 இலக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது அதற்கு இணைஅனுசரணை வழங்கிய அன்றைய பிரதமரான இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நடைபெறும் ஜெனிவா அமர்வு பற்றி ஏதும் அறியாதவர் போன்று அல்லது அக்கறை இல்லாதவர் போன்று லண்டன், ஜப்பான், பிலிப்பைன்ஸ் என்று உலகவலம் வந்துகொண்டிருக்கிறார். ஆனால் அமைச்சர் அலி சப்றி முழுமூச்சுடன் எதிர்வாதாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
2019ல் ஜனாதிபதித் தேர்தலில் கோதபாயவுக்காக முழுமூச்சுடன் பரப்புரை செய்ததன் வழியாக அரசியலுக்குள் காலடி வைத்த இவருக்கு, அதற்கான உபகாரமாக 2020ல் பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பி. பதவி கிடைத்தது. அடுத்து, கோதபாய ஆட்சியில் முதலில் நீதி அமைச்சராகி, பின்னர் பசில் ராஜபக்சவின் பதவி விலகலையடுத்து நிதி அமைச்சராகி, இறுதியாக ரணிலின் ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராகியுள்ளார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் இவர் வகித்த இரண்டு பதவிகள் முக்கியமானவை. 2012ம் ஆண்டில் இலங்கை அரசின் சார்பில் மனித உரிமை பேரவையில் ஆஜராகியவர். கோதபாய மீது நல்லாட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளில் அவருக்காக சட்டத்தரணியாக ஆஜரானவர்.
இந்தப் பின்புலங்களின் வழியாக இவரைப் பார்க்கையில், ஜெனிவாவில் இலங்கையை மீட்பதற்கு இவர் எடுக்கும் நடவடிக்கைகளின் தன்மையை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
தற்போதைய ஜெனிவா அமர்வு இலங்கையின் மீது இரண்டு வகைக் குற்றங்களைச் சுமத்தியுள்ளது. முதலாவது, போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூறல் விசாரணை. அடுத்தது பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டோருக்கான நடவடிக்கை. தற்போதைய அமர்வின் ஆரம்பத்தில் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியானது. இலங்கையின் போர்க்குற்ற விவகார நடவடிக்கைகளுக்கு சர்வதேச விசாரணை தேவையென்பதை வலியுறுத்திய இந்த அறிக்கை, உலக நாடுகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கூறியது.
போர்க்குற்றங்களில் நம்பத்தகுந்த வகையில் சம்பந்தப்பட்ட பல படைத்துறை அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் மிக உயர்ந்த இடங்களில் ஊக்கவிப்புகள் வழங்கப்பட்டதை இந்த அறிக்கை சுட்டியது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கமால் குணரட்ண, முப்படைகளின் தலைமை அதிகாரி சவேந்திர சில்வா உட்பட நான்கு டசின் வரையான படைத்துறை அதிகாரிகள் இதில் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். கனடாவும் ஜேர்மனியும் இவ்வாறு அடையாளம் காட்டப்பட்டவர்களை தூதரக பணிக்கு ஏற்க மறுத்ததும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.
அடுத்ததாக, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பது இந்த வருடம் முதல்முறையாக மனித உரிமை பேரவையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை. தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இல்லாத நிலையில், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிக்கவும், விசாரணையை மேற்கொள்ள உலகளாவிய ரீதியிலுள்ள வழிகளைப் பயன்படுத்தி பொறுப்புக் கூறும் முயற்சிகளில் ஏனைய நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமென்பது இக்கோரிக்கையின் அடிநாதம்.
பொருளாதாரக் குற்றம் என்பது நிதி மோசடி, ஊழல், கையாடல் என்ற பல அம்சங்களைக் கொண்டது. இதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவராக கோதபாயவின் சகோதரரான அப்போதைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அடையாளம் காணப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் நான்கு மாத அனுமதி பெற்று அமெரிக்கா சென்ற இவர், சகலருடனுமான தொடர்புகளை இப்போது துண்டித்து விட்டதாகவும், இவரது புதிய தொலைபேசி இலக்கம்கூட எவருக்கும் தெரியாது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெனிவா முன்வைத்திருக்கும் போர்க்குற்றம் என்பது ராஜக்சக்களை நேரடியாக இலக்கு வைத்துள்ளது. முக்கியமாக, போர்க்காலத்தில் ராணுவ அதிகாரியாகவும், பாதுகாப்புச் செயலாளராகவும் கோதபாய பணியாற்றிய நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டது.
பொருளாதார குற்றமும்கூட நேரடியாக ராஜபக்சக்களுடன் சம்பந்தப்பட்டது. மகிந்த ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவை அவரது சகபாடிகளும் தொழிற்துறையாளர்களும் ஷபத்து வீதம்| என்று அழைத்ததை நினைவுபடுத்தினால் அதனை புரிந்து கொள்ளலாம்.
ராஜபக்சக்களினால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட அலி சப்றி, தம்மால் முடிந்தவரை அவர்களைக் காப்பாற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். முடியுமானால் ராஜபக்சக்களை அவர் கவனித்துக் கொள்ளட்டும் என்ற பாணியில் ரணில் தமது அரசியல் பயணத்தை மேற்கொள்கிறார்.
செப்டம்பர் மாதத்தில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையிலும், ஐக்கிய நாடுகள் சபையின் 77வது அமர்விலும் அலி சப்றி உரையாற்றியபோது இலங்கை அரசு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்துக்காகவும், மத வெறுப்பற்ற நிலைப்பாட்டுக்காகவும் செயற்பட்டு வருவதாக கூறியிருந்தார். அதேசமயம் ஜெனிவாவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தை மறுதலிக்கும் இவர், இது நியாயமற்றது என்று ஊடக செவ்வியொன்றில் சுட்டியுள்ளார். இதற்காக முக்கியமான இரண்டு விடயங்களை இவர் கையில் எடுத்துள்ளார்.
வெளிப்புற ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறை, இலங்கையின் ஆயுதப் படையினர் மீது எதிர்காலங்களில் நாட்டுக்கு வெளியே வழக்குகளை தாக்கல் செய்ய வழிவகுக்கும் என்பதால் இந்தத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு உறுப்பு நாடுகள் வாக்களிக்க வேண்டுமென கோரப்போவதாக கூறியுள்ளார்.
புதிய தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என்பது இவரது வாதம். முன்னைய காலங்களில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜெனிவா தீர்மானங்கள் இலங்கையின் இறையாண்மையை மீறுவது என்று கூறியது இப்போது காணாமல் போய்விட்டது.
புதிய தீர்மானம் பற்றி அமைச்சர் சப்றி அது வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னரே முடிவை அறிவித்துவிட்டார். தீர்மானத்தில் வெற்றி பெறுவோமோ அல்லது தோற்றுப் போவோமோ என்பதற்கு அப்பால் இதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்ற அவருடைய பகிரங்க அறிவிப்பினூடாக இலங்கையின் நிலைப்பாடு பகிரங்கமாகி விட்டது. அதாவது வாக்களிப்புக்கு முன்னராகவே தீர்மானத்தை இலங்கை நிராகரித்துவிட்டது.
ஜெனிவா காலத்துக்குக் காலம் எத்தனை குற்றங்களை அடுக்கியவாறு புதுப்புது தீர்மானங்களை நிறைவேற்றினாலும் இலங்கை அதனையிட்டு அக்கறை கொள்ளப்போவதில்லையென்பதை 50:1 தீர்மானத்துக்கு முன்னராகவே அமைச்சர் அலி சப்றி தெரியப்படுத்திவிட்டார். இதற்குப் பின்னர், இந்தத் தீர்மானங்களால் என்ன பலன் என்று கேட்பதைத் தவிர வேறெதனையும் கூற முடியவில்லை.
பனங்காட்டான்