சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி நிறுத்தம்

74 0

சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்ட விசேட வட்டி வீத முறைமையை இரத்துச் செய்யுமாறு தெரிவித்து இலங்கை மத்திய வங்கியினால் சகல உள்நாட்டு வங்கிகளுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்காக வங்கிகளால் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்ட விசேட வட்டி வீத முறை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சகல வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்குமாறும், எதிர்காலத்தில் புதிதாக ஆரம்பிக்கும் மற்றும் புதுப்பிக்கும் நிலையான வைப்புகளுக்கு இந்த விசேட வட்டி வீத பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 29 ஆம் திகதி திறைசேரியின் இடைக்கால செயலாளரினால் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை மத்திய வங்கியின் அண்மைய நாணய மாற்றுக் கொள்கைகளின் பிரகாரம், தற்போது உயர்ந்த வட்டி வீத சூழல் காணப்படுவதுடன், சாதாரண நிலையான வைப்புகளுக்கு வருடத்துக்கு 14.5 சதவீதம் எனும் வட்டி வழங்கப்படுகின்றது.

சிரேஷ்ட பிரஜைகளின் ரூ. 15 இலட்சம் வரையான நிலையான வைப்புகளுக்கு வருடத்துக்கு 15 சதவீதம் எனும் வட்டி வழங்கும் முறைமை நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.