பொலிஸாரின் துப்பாக்கி குறி தவறியதில் பஸ்ஸில் பயணித்த பெண் உயிரிழப்பு

100 0

கம்பஹா – தங்கோவிட்ட பகுதியில், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொள்ளைக் கோஷ்டியொன்றினை இலக்கு வைத்து பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டின் போது, இலக்குத் தவறிய துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று காரணமாக பாதையில் பயணித்த இ.போ.ச. பயணிகள் பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி மாவட்டம், ஹப்புருகல -வன்னிகஹவத்தையைச் சேர்ந்த இரேஷா சியாமலி எனும் 29 வயது பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தின் போது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுடன்  வேனில் தப்பிச் சென்றுள்ள கொள்ளையர்கள், வத்தளை – மாபோல வரை அதில் பயணித்துள்ளதுடன் மாபோலையில் வேனை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு கொள்ளையர்கள் மட்டும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

இன்று (2) அதிகாலை நான்கு மணி அளவில்  தங்கோவிட்ட நகரில் உள்ள மதுபான நிலையத்தை உடைத்து மது போத்தல்கள் கொள்ளையிடப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தங்கோவிட்ட பொலிஸ் குழுவொன்று அப்பகுதிக்கு சென்றுள்ளது.  கொள்ளையர்களை கைது செய்ய பொலிசார் முயன்ற போது, ‘நெருங்க வேண்டாம் … சுட்டுவிடுவோம் ‘ என  கூறியவாறு கொள்ளையர்கள் சிறிய ரக வேன் ஒன்றில் தப்பியோட முயன்றதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

இதனையடுத்து பொலிசார் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர். எனினும் கொள்ளையர்கள் தாங்கள் வந்த வேனில் தொடர்ந்தும் தப்பியோடவே, துரத்தி துரத்தி பொலிசார் சுட்டுள்ளனர்.

இதன்போது, அனுராதபுரம் டிபோவுக்கு சொந்தமான இ.போ.ச. பயணிகள் பஸ் வண்டியொன்று, கலன் பிந்துனுவெவவில் இருந்து கொழும்பு நோக்கி அப்பகுதியூடாக பயணித்துள்ளது.

பொலிஸார் கொள்ளையர்களின் வேனை நோக்கி முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இலக்கு தவறி, குறித்த இ.போ.ச. பஸ் வண்டியின்  பின் ஆசணத்தில் வலது பக்க மூலையில் பயணித்த பெண்ணை  பதம்பார்த்துள்ளது.

குறித்த பெண் கலன் பிந்துனுவெவவில் இருந்து தனது கணவர் மற்றும் தாயாருடன் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்துள்ளார்.

இந் நிலையில் காயமடைந்த குறித்த பெண்ணை உடனடியாக  வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸாரும், அங்கிருந்தோரும் நடவடிக்கை எடுத்துள்ள போதும், வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார். அது குறித்த நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் கொள்ளையர்கள் கொழும்பு திசை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் கொள்ளையர்கள் பயணித்த சிறிய ரக வேன், மாபோலை பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால்  மீட்கப்பட்டது. குறித்த வேனில் இருந்து மது போத்தல்கலும் புதிய வாகன டயர்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த வேன் கண்டி பகுதியில் வைத்து திருடப்பட்டுள்ள ஒன்று என பின்னர் தெரியவந்துள்ளது.

மாபோலை வரை பயணித்த கொள்ளைக் கோஷ்டி அங்கு வேனை கைவிட்ட பின்னர், பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு கொள்ளையர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதனையடுத்து ராகம பொலிசார் அவ்விருவரையும் கைது செய்து பொலிஸ் காவலில் சிகிச்சையளித்து வருகின்றனர்.

அதன் பின்னர் அவர்களின் தகவல் பிரகாரமே ராகம பொலிசார் கொள்ளையர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய வேனையும், அவ்விருவரும் வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கர வண்டியையும் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

மேலும் பல  கொள்ளையர்கள் தப்பிச்  சென்றுள்ள நிலையில், கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  ஜகத் ரோஹனவின் ஆலோசனைக்கு அமைய,  தங்கோவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர் காமினி வீரவர்தன தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

இதனைவிட, கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களுடன் இருந்த ஏனையவர்கள் அவர்களின் கைகளில் இருந்ததாக கூறப்படும் ஆயுதங்களை கைப்பற்றவும்  ராகம பொலிஸ்  பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  புத்திக ராஜபக்ஷவின் தலைமையில்,  குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரிப்  பிரதான பொலிஸ் பரிசோதகர் அசேல பெராவின் கீழான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.