இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளுடன் அமெரிக்கா வலுவாக நிற்பதாக புலம்பெயர் தமிழர் கூட்டணியிடம் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களை தான் தனிப்பட்ட ரீதியில் சந்தித்தாகவும் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது இன்றியமையாததாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கின் ஏற்பாட்டில் கடந்த செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி தூதுவருக்கும் புலம்பெயர் தமிழர் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நிகழ்நிலையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது இலங்கையிலுள்ள அமெரிக்க செயற்திட்டம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் என்பன தொடர்பில் புலம்பெயர் தமிழர் கூட்டணியின் பிரதிநிதிகளால் தூதுவர் ஜுலி சங்கிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
குறிப்பாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தினால் வழங்கப்படும் உதவிகள் பின்தங்கிய சமூகப்பிரிவினர் மத்தியில் எவ்வாறு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுமென சில இலங்கை – அமெரிக்க சமூகத்தலைவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கிய முறைமையின் அடிப்படையிலேயே அவ்வுதவிகள் பகிரப்படுமென அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் உறுதியளித்ததுடன் வெளிநாட்டு உதவிகள் எவ்வாறு விநியோகிக்கப்படும் என்றும், அவை எவ்வாறு கண்காணிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு சுகாதாரத்துறையை விருத்திசெய்தல், தொழில்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தல், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்திடம் இருந்து சிறிய வணிகங்களுக்கு அவசியமான நிதியைப்பெறல் ஆகிய விடயங்கள் சார்ந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதேவேளை அமெரிக்காவினால் வழங்கப்படும் இவ்வுதவிகள் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதாக இலங்கையை இணங்கச்செய்வதுடன் தொடர்புபட்டிருக்கின்றதா என்று அமெரிக்கத் தமிழர் செயற்பாட்டுக்குழுவின் பிரதிநிதி அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் வினவினார். அதற்குப் பதிலளித்த தூதுவர் ஜுலி சங், அமெரிக்கா இணையனுசரணை நாடுகளுடன் வலுவாக நிற்பதாகவும், தான் தனிப்பட்ட ரீதியில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்தித்ததாகவும், எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது இன்றியமையாததாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும் 2009 ஆம் ஆண்டின் பின்னரான நல்லிணக்கப்பொறிமுறையைப் பொறுத்தமட்டில், கரிசனைகளை வெளிப்படுத்தக்கூடிய முக்கிய கட்டமைப்பாக தாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைக் கருதுவதாகவும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்கத்தயாராக இருப்பதாகவும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.