அமெரிக்காவிலிருந்து மற்றொரு தொகுதி மருத்துவ உதவி

116 0

12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்காவின் பிரபல மனிதாபிமான உதவி அமைப்புகளுடன் இணைந்து, இலங்கைக்கு மருந்துகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இதுவரை, 03 தடவைகளில், சுகாதார அமைச்சுக்கு மருந்துப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதன் இறுதிக் கட்டமாக இன்னுமொரு தொகை மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்று (02) இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்த அமைப்புகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, Heart to Heart International, Hope Worldwide, மற்றும் Americares ஆகிய நிறுவனங்களுக்கு தனது நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.

Heart to Heart International நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 9.131 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை கையளித்திருந்தது. Americares நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு வழங்கிய உதவியின் மதிப்பு 773,000 அமெரிக்க டொலர்களிலும் அதிகமாகும்.

மேலும் Hope Worldwide நிறுவனம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு அனுப்பவுள்ள உதவிப் பொருட்களின் பெறுமதி 1.74 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.