“கல்வியைக் கொல்லாதீர்கள்” – ஆப்கன் தாக்குதலைக் குறிப்பிட்டு ரஷீத் கான் ட்வீட

172 0

ஆப்கனில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலைக் குறிப்பிட்டு “கல்வியைக் கொல்லாதீர்கள்” என்று கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காஜ் கல்வி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.40-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மேலும், உண்மையான பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் பெரும்பாலனவர்கள் தேர்வு எழுத காத்திருந்த மாணவிகள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் குறித்து மாணவர் கூறும்போது, “எங்களுக்கு காலை தேர்வு நடக்க வேண்டியிருந்தது. அப்போது நுழைவாயிலில் துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்டன. இதனைத் தொடர்ந்து நாங்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்துவிட்டோம்” என்றார்.

கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுவெடிப்பு பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இச்சம்பவத்துக்கு கவலை தெரிவித்து “கல்வியைக் கொல்லாதீர்கள்” என்று கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார்.

 

இதனிடையே, இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஹிஜாப்க்கு எதிராக ஈரானில் பெண்கள் போராட்டத்தை முன்னெடுக்க, ஆப்கனிலும் பெண்கள் உரிமை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.