தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கிராம சபைக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது.
டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை அக்டோபர் 12-ம் தேதிக்குள் அனுப்ப மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.