ஜனாதிபதியின் கையொப்பத்துடன் பல இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு செயலர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட 10 பேரை பிரதிவாதிகளாக பெயரிட்டே இந்த மனுவை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் தலைமையிலான சட்டத்தரணிகளான சந்துன் கமகே, புத்வின் சிறிவர்தன அகையோரை உள்ளடக்கிய குழு இந்த மனுவை மனுதாரர்கள் சார்பில் தாக்கல்ச் செய்துள்ளனர்.
அதன்படி, 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவினால் கொழும்பின் பல பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில் இதுவரை ( நேற்று 28)உயர் நீதிமன்றில் இரு மனுக்கள் தாக்கல்ச் செய்யப்ப்ட்டுள்ளன.
முன்னதாக முதலில், சோசலிஷ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் மகேஷ் தரங்க இந்துனில், குறித்த வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி முதல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவிலும் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு செயலர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட 10 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அரச இரகசியங்கள் சட்டத்தின் இரண்டாம் சரத்தின் பிரகாரம், ஏதேனும் ஒரு இடத்தை, கட்டடத்தை, கப்பலை அல்லது விமானத்தை தடை செய்யப்பட்ட இடமாக அறிவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகாரமுள்ளது எனக் கூறும் மனுதாரர்கள் விசாலமான ஒரு பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என மனுவூடாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
வேறு நோக்கங்களுக்காக இரண்டாம் சரத்தின் கீழ் உத்தரவிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், மனுவை விசாரணைக்கு ஏற்று, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், குறித்த வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்து கட்டளை பிறப்பிக்குமாறு ம் மனுக்கள் ஊடாக கோரியுள்ளனர்.