சவுதி அரேபிய பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிப்பு

157 0

சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் இருந்து வருகிறார். சவுதி அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த அவரை பிரதமராக சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.

மேலும், சவுதி அரேபியாவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்புத் துறை அமைச்சராக முகமது பின் சல்மானின் சகோதரரான காலித் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் காலித், துணை பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். உள்துறை அமைச்சராக அப்துல் அஜிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சராக முகமது பின் அப்துல்லா அல் ஜடான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சவுதி மன்னர் முகமது சல்மான் கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லா நிலையில் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே அமைச்சர் பொறுப்பு தற்போது மாற்றியமைக்கப்பட்டு முகமது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் முன்பு இருந்தன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன. இந்த நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக வந்த முகம்மது பின் சல்மான் பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளவும், பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.